Saturday 11 March 2017

தேவ - அசூர கட்டுக் கதைகளை conscious ஆக மறக்க வேண்டும்!


1
முருகன் தமிழ் நிலப்பரப்பு(குறிஞ்சி) சார்ந்த இனக்குழு தெய்வம். முருக வழிபாடு முழுக்க முழுக்க சூரிய வழிபாட்டுடன் தொடர்புடையது. கந்தன் என்பது வடமொழிப் பெயர். சமகாலத்தில் கருப்ப சாமியையே சிவனின் பிள்ளை என்று வைதீக ஒப்பனையிட்டு கதை கட்டுபவர்களுக்கு முருகன் எம்மாத்திரம். கந்த புராணம் போன்ற நூல்கள் மூலம் முருக வழிபாட்டிற்கு வைதீக முலாம் பூசப்பட்டு விட்டது. மற்றபடி முல்லை நிலத் தெய்வம் மாயோனுக்கும், மருத நிலத் தெய்வம் இந்திரனுக்கும், நெய்தலின் வருணனுக்கும், பாலைநில கொற்றவைக்கும் நேர்ந்தது இதே கதிதான். உழைத்து வாழத் திராணியற்ற ஒரு சிறு குழுவின் கட்டுக்கதைகள் வழியிலான மேலாதிக்க முறைமைதான் இவை. வேட்டைத் தொழிலோ, உழவுத் தொழிலோ, கடல்சார் தொழிலோ எதுவாயினும் பிரமினியத்தின் மொழியில் உழைப்பிற்கு பெயர் பாவம்தான். உழைப்பாளர்கள் நிந்திக்கப்பட்டவர்கள்தான். அறிவு உழைப்பு, உடல் உழைப்பு என சமூகவயப்பட்ட இரண்டையும் தமது சூழ்ச்சி திறத்தின் மூலம் தரம் தாழ்த்தியது. தன்னை நிறுவுவதற்கு விஞ்ஞான தன்மையற்ற எதிர்மறை அறிவினை கருவியாகப் பயன்படுத்தியது பிராமினியம். சமூகவயப்பட்ட உழைப்பாளர்களின் அடையாளங்கள் எந்தவடிவிலும் மேலெழுந்து விடக்கூடாது என்பதில் பிராமினியம் எப்பொழுதும் கண்ணும் கருத்துமாகவே இருந்துவந்திருக்கிறது. ( குறிப்பு; இந்து மதத்தில் இப்பொழுது வழிபடப்படும் எந்தப் பெருங்கடவுளும் வேதங்களில் கடவுளராக குறிக்கப்படவில்லை. வேதங்களில் கடவுளாகக் குறிக்கப்படுபவன் "க" எனப்படும் பிரஜாபதி. இவருக்கு எங்கேனும் கோவில் இருக்கிறதா? அறிந்தவர்கள் சொல்லவும்).
2
குறிஞ்சி என்பது மலையும் மலை சார்ந்த வாழ்வும்.அதன் காலமாவது கூதிரும் யாமமும். அத்துடன் முன்பனிக்காலமும் அதற்கு உரியது. தனது தேவையின் பொருட்டே தெய்வத்தை உருவாக்குவதே மனிதப் பண்பாட்டின் ஆதிக் கூறு. மலை நிலத்தில் வாழும் மக்களுக்கு சூரியன்(வெயில்) தேவையானதாகவும் அமானுஷ்யமானதாகவும் இருக்கிறது. எனவேதான் அவர்கள் சூரியனுக்கு முருகன் என தெய்வம் வடிவம் வழங்கி வழிபட தலைப்பட்டனர். கதிர், வேல் என்பன போன்ற தமிழ்ப் பெயர்கள் சூரியனுடன் தொடர்புடையதாகும்.வடமொழி மரபில் வழங்கப்படும் கந்தனுக்கும் தமிழ் தெய்வம் முருகனுக்கும் தொடர்பில்லை. ஸ்கந்தம் (விந்து) என்கிற சமஸ்கிருத வேர்ச்சொல்லினை உடையது கந்தன் எனும் பெயர். முருகனிடம் உள்ள உலகாயதப் பண்புகள் வைதீகக் கந்தனிடம் இல்லை. இரண்டையும் கலந்துகட்டி கதைப்படுத்திவிட்டது பிராமினியம். முருகு வழிபாட்டின் படிமலர்ச்சியே முருகன் வழிபாடு. நமது சங்க இலக்கியங்களின் வழி இவ்வுண்மையை நிறுவ முடியும். நிறுவியும் இருக்கிறார்கள். இது போன்ற விளக்கத்தை தமிழின் பிற திணை தெய்வங்களுக்கும் வழங்குவதில் எந்தவித சமூக விஞ்ஞான இடையூறும் இல்லை. உதாரணமாக மருத நிலத் தெய்வம் இந்திரனை எடுத்துக்கொள்வோம். அவன் ஐம்பூதங்களின் அரசன். வேளாண் வாழ்க்கை வளமானதாக அமைய பருவநிலையில் ஒரு சமநிலைத்தன்மை அவசியம். பருவநிலையின் சமநிலைத்தன்மை என்பது பஞ்சபூதங்களையும் சார்ந்தது. எனவேதான் இந்திர வழிபாடு. இரட்டைக் காப்பியங்கள் சோழ நாட்டில் (சோழ நாடு சோறுடைத்து) நிகழ்ந்த இவ்வழிபாடு குறித்து பதிவு செய்கின்றன.
3
ரமாயணம், மாகாபாரதம் இரண்டும் ஒற்றை தன்மையுடைய பிரதிகள் அல்ல. பலவகை ராமாயணங்களும் பாரதங்களும் உண்டு. இவை இந்தியாவின் பல்வேறு இனக்குழுக்களிடையே நிலவிய வாய்மொழிக் கதைகளின் தொகுப்புதான். இந்த இரண்டுமே சத்திரியர்களுக்கிடையே நிலவிய மோதல்தான். உள்நாட்டு கலவரங்களையும் உறவினர்களுக்கு இடையிலான மோதலையும் ஊதிப் பெருக்கி பிராமணன் எழுத்துப் படுத்திவிட்டான். அதனைப் பிடித்து நாம் தொங்கிக்கொண்டிருக்கிறோம். கிரேக்க மரபிலிருந்த போர்க்கடவுள்கள் எல்லோரும் எப்பொழுதோ வழியனுப்பி வைக்கப்பட்டுவிட்டார்கள். நாம் தான் இன்னும் தேவ அசூர யுத்தம் பற்றி திகட்டாமல் உரையாடிக்கொண்டிருக்கிறோம். இந்து மதக் கடவுள்களில் எவரையேனும் முன்னிறுத்தி ஆறம் குறித்துப் பேசமுடியுமா? மகா பாரதமோ ராமயனமோ அசூரர்களை பற்றி சொல்வது ஒரு புறம் இருக்கட்டும். அதன் நாயகர்களான சத்திரியர்களை ஆன மட்டும் கீழ்மைப் படுத்தியிருக்கும். பிரமினியத்தொடு இணக்கம் கொண்ட சத்திரியர்களின் இருப்பு ஸ்திரப்பட்டது. முரண்பட்டவர்கள் சூத்திரர்களாக கீழிறக்கம் செய்யப்பட்டார்கள். அடங்காதவர்கள் பஞ்சமர்களாக சமூக விலக்கம் செய்யப்பட்டார்கள். "பிராமணரிடம் வணக்கமின்மையாலும், உபநயன முதலியவற்றை விட்டொழித்ததாலும், க்ஷ்த்திரிய ஜாதிகள் இவ்வுலகில் நாளடைவில் நாலாம் வருணத் தன்மை அடைந்தார்கள். பௌந்த்ரம், ஔந்திரம், த்ரவிடம், காம்போஜம் .......ஆகிய நாடுகளை ஆண்ட மன்னவர் அனைவரும் மேற்குறித்தவாறு, குலந் தாழ்ந்து போனவர்களே". என்று மனுதர்மத்திலேயே எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த சூத்திரர்களும் அசூரர்களும் வேறு வேறானவர்கள் அல்ல. எப்பொழுதெல்லாம் நாம் இந்து மதத்திற்கு இசைவான நிலைப்பாட்டை எடுக்கிறோமோ அப்பொழுதெல்லாம் பிரமினியத்தின் இழிவுகளை மனமுவந்து ஏற்றுக்கொள்கிறோம் என்றுதான் அர்த்தம். தமிழின் திணை மரபுசார் வழிபாட்டு முறைமை மேற்குறித்த இந்துமத வைதீக ஐதீகங்களுக்கு நேரெதிரானது. அதில் ஏற்ற இறக்கம் கிடையாது. முழுக்க முழுக்க இயற்கையோடியந்த வாழ்க்கை முறை சார்ந்தது. எனவே நமது விவாதங்களை தமிழ் மரபிலிருந்து தொடங்க வேண்டியுள்ளது. வைதீக மரபிலான தேவ - அசூர கட்டுக் கதைகளை conscious ஆக மறக்க வேண்டும்.

No comments:

Post a Comment