Saturday 11 March 2017

அடித்தளமக்களின் கலைஞர் மதுரை பெருமாள் கோனார்

அடித்தளமக்களின் கலைஞர் மதுரை பெருமாள் கோனார்
மிகமிகப் பின்தங்கிய கிராமப்புறச் சூழலில் பிறந்து வளர்ந்ததாலோ என்னவோ எனக்கு எப்பொழுதும் நாட்டுப்புறப்பாடல்கள் மீது அலாதியான ரசனையும், நாட்டுப்புறக் கலைஞர்கள் மீது அலாதியான பற்றும் உண்டு. நான் அதிகமும் விரும்பிக் கேட்பதும் நாட்டுப்புறப்பாடல்கள்தான். மதுரை நகரத்து சி.டி. கடைகளில்லாம் நாட்டுப்புறப்பாடல்களைத் தேடித்தேடிச் சேகரித்து வைத்திருக்கிறேன். என்னிடம் நாட்டுப்புறப்பாடல்களின் தொகுப்பு (ஒலி வடிவம் மட்டும்) குறைந்தது ஆயிரமாவது இருக்கும். இப்படி ஒரு பயணத்தில் கண்டடைந்த கலை ஆளுமைதான் “மதுரை பெருமால்கோனார்”. யார் இந்தப் பெருமாள்கோனார்? நாட்டுப்புறக் கலைஞர்களாலும், நாட்டுப்புறவியல் துறை சார்ந்த ஆய்வாளர்களாலும் ஓரளவு அறியப்பட்ட ஆளுமையான இந்தக் கலைஞனைப்பற்றி வெகுமக்கள் அறிய வாய்ப்பில்லைதான் என்றாலும் இவர் பாடல்களைக் கேட்டு மனதைப் பறிகொடுக்காத தமிழர்கள் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
“நாடு சும்மாக்கிடந்தாலும் கிடக்கும்
பாழும் நாகரீகம் ஓடிவந்து கெடுக்கு!”
என்ற பாடல்வரிகளுக்குச் சொந்தக்காரர்தான் மக்கள் கலைஞர் பெருமால்கோனார். பலநூறு பாடல்களை இவர் இயற்றியிருந்தாலும் அவை இன்னும் முறையாகத் தொகுக்கப்படவில்லை. எனினும் பரவை முனியம்மா போன்ற நாட்டுப்புறக் கலைஞர்களின் குரலில் உலகம் முழுக்க ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது.
“மஞ்சிமல நரிக்குறவரு நாங்களே சாமி – இந்த
மண்டலத்த சுத்திவாறோம் பாருங்க சாமி!
கொஞ்சுங்கிளி குருவி மைனா கோக்குக சாமி – காட்டு
குள்ளநரி கொம்பிருக்கு வேணுமா சாமி!
எனப் பட்டிதொட்டியெல்லாம் புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இந்த மக்கள் கலைஞர்தான். நரிக்குறவர் இனமக்களின் டேப் ரெக்கார்டுகளில்
“நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க.....”
என்ற பாடலுக்குப் பிறகு அதிகமாக ஒலித்த பாடல் இதுவாகத்தான் இருக்கும். இந்தப் பாடலுக்குப் பல்வேறு சிறப்புகள் உண்டு. தென்மாவட்ட தெருக்கூத்துகளில் நிகழ்த்தப்படும் “குறவன் குறத்தி ஆட்டத்தில்” முழுக்க முழுக்க அவ்வினத்தாரை கேலிப்பொருளாகப் பார்க்கும் பார்வையே மேலோங்கி இருக்கும். அதற்கு மாற்றாக இந்தப் பாடல் நரிக்குறவர் இனத்தாரின் பண்பாட்டு அடையாளங்களை இனவரைவியல் தன்மையோடு உயார்த்திப்பிடித்தது.
“காமாட்சி தேவியோட புத்திரன் சாமி – நாங்க
காத்தவராயன வளர்த்தோமே சாமி!”
என்பன போன்று “நரிக்குறவர் இனத்தாரின்” குலத் தொன்மங்கள், எட்டுப் பானைகளுக்கு மேல்பானை பொங்கவைத்து எருமைக்கிடா பலிகொடுக்கும் வழிபாட்டுச் சடங்குகள், இனக்கட்டுப்பாடுகள் முதலியவை இப்பாடலில் நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பாடலின் இறுதியில் இடம்பெறும்
“பரவையூருச் சாரலிலே வாழுறேன் சாமி – நான்
படிப்பது பெருமாள் கோனார் பாட்டுங்க சாமி!”
என்ற வரிகளின் வழியாகத்தான் பெருமாள் கோனாரை இனங்காண முடிந்தது. அப்பொழுதிருந்தே அந்தக் கலைஞனைப் பற்றிய தேடலில் தீவிரமானேன். பரவை முனியம்மா போன்ற நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடியுள்ள அவர்தம் பாடல்களின் ஒலிக் குறுந்தகடுகளை சேகரித்தேன். எமது உறவினர் ஒருவர் மூலம் அவர் மதுரை  தெற்குவாசல் அருகே உள்ள மாகாளிபட்டியைச் சேர்ந்தவர்எ
1964-ஆம் ஆண்டு டிசம்பர் 22- செவ்வாய் இரவு பல்லாயிரம் மக்களை பலிகொண்ட “தனுஷ்கோடி புயல்” இயற்கைப் பேரழிவை யாரும் எளிதில் மறந்துவிட இயலாது. அந்தப் புயலில் தனுஷ்கோடி நகரமே தடம் தெரியாமால் அழிந்துபோய்விட்டது. இந்நிகழ்வை துயர் தோய்ந்த வரிகளால் பாடலாக்கியுள்ளார் பெருமாள் கோனார்.
ன அறிந்துகொண்டேன். அத்தோடுகூடவே அவர் காலமாகி ஒருசில வருடங்கள் கடந்துவிட்டன எனவும் தெரியவர அம்முயற்சியினையும் கைவிட்டேன். கள்ளழகர் வைகையாற்றில் இறங்கவரும் எதிர்சேவை நாளன்று இரவு பேச்சியம்மன் படித்துறையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நாட்டுப்புறப் பாடகர்கள் பெருமாள் கோனாரின் சாமிப்பாடல்களைப் பாடுவார்களாம். அவர் வாழ்ந்த காலங்களில் அவரே வந்து பாடுவார் என்ற தகவலும் கிடைத்தது. இப்பொழுது அத்தகைய மரபுகள் தொடர்கிறதா எனத்தெரியவில்லை.
“வாழும் பெரியோர்களே வாலிபரே தோழர்களே
வணக்கங்கள் பலகோடி! - ஜனங்களுக்கு
வணக்கங்கள் பலகோடி! – அந்த
வரங்கொடுத்த தனுஷ்கோடி நகரத்திலே – இப்ப
வஞ்சகப் புயலடிச்ச சஞ்சலத்த சொல்லிவாறேன்
வண்ணத்தமிழ் கவிபாடி – நானும் இப்ப
வண்ணத்தமிழ் கவிபாடி!
.............
ஒருவர் இருவர் இல்லை எத்தனை பிணங்கள் என்று
உறுதி தெரியவில்லையே! – கடலில்
ஊறிப்போன பிணங்களைக் காக்கா கொத்தும் சேதிகள
உள்ளமே பொறுக்கவில்லையே!
...............”
என நீளும் இப்பாடல் வரிகள் கேட்பவரின் ஆழ்மனதைப் பற்றி வலி பெறச் செய்துவிடும். ஓர் இரவில் சில மணித்துளிகளில் நிகழ்ந்த கடற் சீற்றத்தால் தனுஷ்கோடி நகரம் பேரழிவைச் சந்தித்தது. ஒரு சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கடல் தாயின் புயற் சீற்றத்துக்குப் பலியாயினர். அந்த நகருக்குள் பிரவேசித்த ரயில் கடலுக்குள் கவிழ்ந்து மூழ்கியது. அதில் பயணித்த 200 பயணிகள் கடலோடு கடலாக கரைந்து போயினார். அன்றைய தினம் தனுஷ்கோடிக்கு (ஆண் குழந்தை வரம் வாங்க) வரவிருந்த ஜெமினி-சாவித்திரி தம்பதியினர் புயலின் அறிகுறிகளை அறிந்து ராமேஸ்வரத்திலேயே தங்கிவிட்டதால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அடுத்தநாள் தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பிலிருந்த காமராசர், பக்த்தவச்சலம், கக்கன், மதியழகன் முதாலானோர் தனுஷ்கோடிக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜெமினி-சாவித்திரி தம்பதியினர் ஐந்தாயிரம் ரூபாய், சரோஜாதேவி பத்தாயிரம் ரூபாய், எம்.ஜி.ஆர். ஒரு லட்சம் ரூபாய், இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி எழுபத்தைந்தாயிரம் ரூபாய் எனப் பலரும் நிவாராண நிதிகளை வாரி வழங்கினர். எனினும் என்ன பயன் ஒரு நிமிடத்தில் பல்லாயிரம் மக்கள் மாண்டனரே! தனுஷ்கோடி கடற்கரையில் உறவுகளை இழந்த மக்கள் சஞ்சலத்தில் பித்துப்பிடித்து புலம்பி அலைந்தனரே! என தனுஷ்கோடி பெரும் புயலின் வரலாற்றை கண்ணீர் மல்கக் காட்சிப்படுத்தியுள்ளார் பெருமாள் கோனார்.
“நிகரற்ற வாழ்வை நம்பி நிகரில்லை என்று சொல்லி
நெஞ்சத்தூக்கி கருவங்கொண்டு – திரிபவர்கள்
ரொம்பப்பேரு நாட்டிலே உண்டு!
புயலடிச்ச நிமிஷத்தில் இத்தனைபேர்
மொத்தமொத்தமாகக் கடல் நீருக்குள்ளே மடிந்தார் இன்று!”
என்று நிறைவடையும் பாடலின் இறுதி வரிகளில் வாழ்வின் பொருளை (சித்தர்களைப் போல்) நிலையாமைத் தத்துவமாகச் சொல்லி முடிப்பார்.
ஒருகாலத்தில் மதுரை நகரையே கலங்கடித்த கரிமேட்டுக் கருவாயன், மணிக்குறவன் முதலியவர்களின் வாழ்க்கை வரலாறுகளையும் கதைப்பாடாலாக ஆக்கியுள்ளார் பெருமாள் கோனார். இவ்வ்வகையான துன்பியல் பாடல்கள் கிராமப்புறத்தில் ‘துட்டி’(இழவு) வீடுகளில் பாடப்படுவதுண்டு. இப்படி அடித்தளமக்கள் வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகளை தம் படைப்புத் திறனால் பாடலாக்கி அடித்தளமக்களுக்கே வழங்கிய கலைஞன் பெருமாள் கோனார். இவர் போன்ற நாட்டுப்புறக் கலைஞர்கள்தான் காலங்காலமாக அடித்தளமக்கள் கலைவரலாற்றை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கலை இலக்கிய வரலாற்றில் எப்பொழுதுமே மதுரைக்குத் தனிச்சிறப்பு உண்டு. இவற்றில் மதுரை குறித்த பதிவுகள் தொடர்ச்சியாக நிகழும் ஒன்று. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த இந்த நகரைப்பற்றி எத்தனையோ நாட்டுப்புறப்பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. பெருமாள் கோனாரும் மதுரை நகர் பற்றிப் பாடியுள்ளார். இப்பாடலைக் கேட்கும்போது 50- வருடங்களுக்கு முன்பான மதுரை நகரையே வலம் வந்த பேரனுபவம் மனதை வியாபித்துவிடும்.
“பந்துசனமுள்ள பந்தலில் எங்கள பரிசமிட்ட மாரா
பட்டுப் படிப்போம் வெகு சீரா –கேட்டுப்
பணிந்துகொண்டோம் ஜோரா! – அந்தப்
பாண்டியநாடு மதுரையம்பதிய பார்க்கவேணும் நேரா...!”
என விரும்பிக் கேட்கும் தனது முறைப்பெண்களை ஒருவன் அழைத்துச் சென்று மதுரை நகரைச் சுற்றிக்காட்டுவதாக அமையும் அப்பாடல். திருமங்கலம் ரயில்வே ஸ்டேஷனில் போய் திருவனந்தபுரம் மெயிலுக்கு டிக்கெட் எடுப்பதில் தொடங்கும் பயணம் “ திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மீனாக்ஷி மில், பெரிய கார் செட்டு, ரீகல் டாக்கிஸ், மங்கம்மாள் சத்திரம், டி.வி.எஸ் மெக்கானிக் ஆபீஸ், மதுரை கல்லூரி, மீனாக்ஷி டாக்கீஸ், தெற்குவாசல், தவிட்டுச்சந்தை, அந்த வழியில் அமைந்திருக்கும் சென்மேரீஸ் பள்ளிக்கூடம், திருமலைநாயக்கர் மாஹால், அப்பாவுச் செட்டியார் நகைக்கடை, நியூ சினிமா தியேட்டர், சென்ட்ரல் சினிமா தியேட்டர், தங்கம் டாக்கீஸ் (ஆசியாவிலேயே மிகப்பெரிய திரையரங்கு), சிம்மக்கல் வட்டாரம் தமிழ்ச்சங்கம், செல்லம் தியேட்டர், இம்பீரியல் தியேட்டர், ஐந்து வாசல்களை உடைய மீனாட்சியம்மன் கோவில், ஆடி வீதிகள், யானை கட்டிக்கிடக்கும் கீழ் தெப்பக்குளம், தோணிகள் அலையும் வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் அதில் அமைந்திருக்கும் மைய மண்டபம்..........” எனும்படியாக இந்தப் பாடலில் இன்றைய மதுரை இழந்து கொண்டிருக்கும் பழைய அடையாளங்களை ஆவணப்படுத்தியுள்ளார் பெருமாள் கோனார். இவ்வாறாக இன்னும் பல அறிய பாடல்களை வழங்கியுள்ளார். அவற்றில் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே இந்தப் பாடல்கள்.
இத்தகைய கலைஞகர்களின் அடையாளங்கள் நாட்டுப்புறவியல் சார்ந்த ஆய்வுகளாக மட்டுமே குறுக்கப்பட்டு விடுகின்றன. மற்றபடி எழுத்தாளார்களுக்கு இருப்பதைப் போன்ற காப்புரிமைகள் எதுவும் இவர்களுக்குக் கிடையாது. துறை சார்ந்த ஆய்வாளர்களிடமும் இப்படிப்பட்ட நிலைமைகள் குறித்த அக்கறையோ கவனமோ கிடையாது. ஒருவகையில் நாட்டுப்புறப் பாடாலாசிரியர்கள் தங்கள் அறிவு உழைப்பைப் பறிகொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றுதான் கூறவேண்டும். பெருமாள் கோனார், அவரைப் போன்ற நாட்டுப்புறப் பாடாலாசிரியர்களின் பாடல்களை வெளியிட்டே ஒரு ஆடியோ நிறுவனம் கோடிகோடியாகச் சம்பாதித்துள்ளது. இன்று அந்நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் எல்லாம் கிளைகள் உள்ளன. ஆனால் அந்த அறிவுச் செல்வத்தை உற்பத்தி செய்த கலைஞர்கள் குறைந்தபட்ச அடையாளம் கூட இல்லாமல் காலவெள்ளத்தில் கரைந்துபோய்விட்டனர்.
(புகைப்படம்; ஆசியாவின் பெரிய திரையரங்கான மதுரை தங்கம் தியேட்டர்)

No comments:

Post a Comment