Saturday 14 November 2015

இமையத்தின் புனைகதைகள்
வெ. அண்ணாமலை எனும் இயற்பெயரை உடைய இமயம் 1966ஆம் ஆண்டு கடலூர் மாவட்டத்திலுள்ள கழுதூரி;ல் பிறந்தார். பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். தலித் இலக்கியப் போக்குகள் தீவிரம் கொண்டிருந்த 1990களில் அதுகாறும் நிலவிவந்த தலித் இலக்கியச் செல்நெறிகளிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்;தில் தலித் மக்களின் வாழ்க்கையை சிருஷ்டித்த கோவேறு கழுதைகள் (1994) நாவலின் மூலம் தமிழ் இலக்கிய வெளியில் கவனம் பெற்றார். இதுவே இவரது முதல் படைப்பாகும். இதனைத் தொடர்ந்து ஆறுமுகம் (1999), செடல் (2006) ஆகிய இரு நாவல்களும் மண்பாரம் (2004), வீடியோ மாரியம்மன் (2008), கொலைச் சேவல் (2013) முதலிய சிறுகதைத் தொகுப்புகளும், பெத்தவன் (2013) எனும் குறுநாவலும் வெளிவந்துள்ளன.
பூமணி, சோ.தர்மன் ஆகியோரைப் போன்று இமையமும் தலித் இலக்கியம் குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்தைக் கொண்டிருப்பவர். தன்னை தலித் என்றோ, தனது படைப்புகளை தலித் இலக்கியம் என்றோ அடையாளப்படுத்துவதை ஏற்றுக் கொள்ளாதவர். அவரே குறிப்பிடுவது போல தலித் இலக்கியம் என்பது சாதி எதிர்ப்பு இலக்கியம் அல்ல. சாதி என்னவிதமாக இருக்கிறது என்பதைக் காட்டுவது என்கிற நிலைப்பாட்டிலிருந்து எழுதிவருபவர். இவரது படைப்புகள் பெரும்பாலும் தலித் மக்களின் வாழ்வியலை மையப்படுத்துகின்றன. தலித் சாதிகளுக்குள்ளே நிகழும் ஆதிக்கத் தன்மைகள், ஒடுக்குமுறைகள் உள்ளிட்ட உட்சாதி  முரண்களைச் சித்தரிப்பவை.
“தலித் இலக்கியம் என்பது ஒரு மனிதனின் ஓர் குடும்பத்தின் வாழ்க்கை அல்ல. கதை அல்ல; பெரும்திரளான ஓர் இனத்தின் பண்பாடு, ஒழுக்கநெறிகள், வரலாறு, மொழி, குறியீடு, அடையாளம் எனலாம். அதன் அடிப்படைக் கலாச்சார மீறல், கலக வெளிப்பாடு, சமூக வெளிப்பாடுகள், சமூக, புராணீக மதிப்பீடுகளின் மீதான, சமூகக் கட்டுமானங்களின் மீதான எதிர்ப்பு எனலாம். தலித் இலக்கியம் என்பது அடிப்படையில் ஒரு வாழ்க்கைமுறை” என தமது படைப்புகளை தலித் இலக்கியம் அல்ல என மறுக்கும் இமையம் தலித் இலக்கியத்தின் தன்மை நலன்கள் குறி;த்துக் கருத்துரைக்கிறார். இத்தகைய பண்புகள் பூமணி, சோ. தர்மன், இமையம் ஆகியோரது படைப்புகளில் மிகுந்திருக்கின்றன. எனவே இவர்களது படைப்புகள் தலித் இலக்கியங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. இவ்வடிப்படையில் இமையத்தின் படைப்புகளும் தலித் இலக்கியங்களாகக் கருதப்படுகின்றன.
இவரது முதல் நாவலான கோவேறு கழுதைகள் தலித் மக்களில் ஒரு பிரிவனராகிய “புதிரை வண்ணார்”களின் வாழ்வியலைப் பதிவு செய்கிறது. “சென்னை மாகாணம் திருநெல்வேலி மாவட்டத்தில் புதிரை வண்ணார் எனும் காணத்காதவர்களின் வகுப்பு ஒன்றுள்ளது. அவர்களைப் பற்றிச் சொல்லப்படுவது என்னவென்றால், “அவர்களைப் பார்த்தாலே தீட்டு தொற்றிக் கொள்ளும் என்பதால் அவர்கள் பகற்பொழுதில் வெளியே வரலாகாது. பாவப்பட்ட இம்மக்கள் இராக்காலப் பழக்கங்களைக் கைக்கொள்வது தவிர ‘வேறு வழியில்லை’. வளைக் கரடியைப் போலவும் கழுதைப் புலியைப் போலவும, ஆந்தையைப் போலவும் இருள் கவிழ்ந்தபின் பொந்திலிருந்து புறப்பட்டு வெள்ளி முளைக்கையில் ஓடோடி வீடு திரும்புவார்கள்” என தென் தமிழகத்தில் வாழும் புதிரை வண்ணார்களின் அவல நிலை பற்றி எழுதுகிறார் அம்பேத்கர். இவர்களைப் பற்றிய இலக்கியப் பதிவுகள் எதுவும் இல்லை என்றே குறிப்பிடலாம். தென்தமிழக தலித் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்த பூமணி, சோ. தர்மன் போன்றவர்களின் புனைகதைகளின் கூட வண்ணார்கள் பற்றிய பதிவுகள் உள்ளனவே தவிர இவ்வினத்தார் குறித்த பதிவுகளைக் காணமுடிவதில்லை. இச்சூழலில்தான் வடதமிழகத்தில் வாழும் புதிரை வண்ணார்களின் முழுச்சித்திரத்தை ‘கோவேறு கழுதைகள்’ எனும் நாவலாக்கினார் இமையம். பள்ளர், பறையர், சக்கிலியர் இன மக்களின் வாழ்வியல் சார்ந்த பதிவுகளாக மட்டுமே தலித் இலக்கியம் இயங்கி வழந்த சூழலில் முதன் முதலாக தலித் மக்களிலேயே மிகவும் ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் புதிரை வண்ணார்களின் வாழ்வியலைப் படைப்பாக்கினார் இமையம். தமிழின் முதல் நாவல் இதுதான் என இந்நாவலை  சுந்தரராமசாமி பாராட்டியுள்ளதும் குறிப்பி;டத்தக்கதாகும்.
புதிரை வண்ணார் இனத்தைச் சேர்ந்த ஆரோக்கியம் எனும் குடும்பத் தலைவியின் வாழ்க்கை நகர்வினூடாக கோவேறு கழுதைகள் பயணிக்கிறது. ஆரோக்கியத்தின் குடும்பத்தினர் பறையர் இனத்தவருக்குத் துணிவெளுத்தல், கிழிந்த துணிகளை தைத்துக் கொடுத்தல், பிரசவம் பார்த்தல் உள்ளிட்ட் சேவைத் தொழில் புரிகின்றனர். அவர்களிடம ;இரவல் உணவு வாங்கி உண்கின்றனர். பறையர் இனத்தவரால் உழைப்புக்குத் தகுந்த ஊதியம் கொடுக்கப்படாமல் சுரண்டப்படுகின்றனர். தீண்டாமைக் கொடுமைக்கு உள்ளாகின்றனர். அக்குடும்ப பெண்ணொருத்தி பறையர் இனத்தவரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறார். சொந்த இருப்பிட வசதி கூட (காலனி வீடு) வாய்க்கப் பெறாமல் நிர்கதியான நிலையில் வாழ்கின்றனர். இப்படி அவர்கள் அனுபவிக்கும் துயரங்கள் மனிதநேயம், இரக்கம் முதலான மாண்புகளுடன் வாழும் ஆரோக்கியம் எனும் அபலைப் பெண்ணின் கண்ணீரும் கம்பலையுமாக நாவலெங்கும் வெளிப்படுகிறது. ஆரோக்கியத்தின் சந்ததியினர் அவளைப் பிரிந்து நகர்ப்புறம் நோக்கி இடம் பெயர்கின்றனர். இப்பிரிவு ஆரோக்கியத்திற்குப் பெருந்துயரைத் தருகிறது. ஆனால் இவர்களுக்கு (பறையர் இன) ஒடுக்குமுறையிலிருந்து விடுதலைப் பெற வழியாய் அமைகிறது. ஒடுக்கும் சாதியினராகிய பறையர் இனத்தவரால் புதிரை வண்ணார்கள் கொடிய ஒடுக்குமுறைக்கு உள்ளாகின்றனர் என தலித் உட்சாதி முரணை அப்பட்டமாக வெளிப்படுத்துவதே இந்நாவலின் சாரம்.
“இமையம், மேதைகள் புளங்காங்கிதம் பெறுவதற்காக தலித்துகள் உள்முரண்பாடுகளைப் பற்றிய வரலாற்று அறிவின்றி, கலையழகு மிக்க நாவல் இலக்கியம் பண்ணிக் கொண்டிருக்கட்டும்” என இந்நாவலைக் கடுமையாகச் சாடுகிறார் ராஜ்கௌதமன். இந்நாவலில் உயர்சாதி ஆண்களுடன் பறையர் இனத்துப் பெண்கள் சோரம் போய் சொத்துப் சேர்ப்பவர்களாகக் காட்டப்படுதல், உயர்சாதியினரால் பறையர் இனத்தவர் ஒடுக்கப்படுதல் குறித்தப் பதிவுகள் இல்லாமை போன்ற காரணங்களால் ராஜ்கௌதமன் இந்நாவலைச் சாடுகிறார். இந்நாவலை வியந்து போற்றுபவர்கள் சுந்தரராமசாமி உயர்சாதியினராக இருப்பதும் தலித் அறிஞர்கள் எதிரிடையான விமர்சனங்களை முன்வைப்பதும் கவனத்திற்குரியவை. இத்தகைய நேர்-எதிர் விமர்சனங்களின் ஊடாக கோவேறு கழுதைகள் விவாத்திற்குரிய, விவாதிக்கப்பட வேண்டிய தலித் புனைவாக விளங்குகிறது.
இவரது ஆறுமுகம் நாவல பாண்டிச்சேரியில் ஆரோவில்லின் வருகையை ஒட்டி, பறையர்களின் வாழ்க்கையில் நிகழ்ந்த மாற்றங்களைச் சித்தரிக்கிறது. அதுவரை கிராமப்புறத்தில் அடிமைகளாக வாழ்ந்த தலித் மக்கள் ஆரோவில்லின் வருகையால் தங்களது அடிமைத் தொழில்களை விடுத்து நகர்ப்புறத்துக்கு இடம் பெயர்ந்து சிதறுண்ட தொழிலாளர்களக வாழ்க்கைத் தொடங்குவதைப் பற்றிய பதிவாக அமைகிறது. இந்நாவலின் முதன்மைப் பாத்திரமான ஆறுமுகத்தின் தாய் தனபாக்கியம் வீட்டைவிட்டு ஓடி வந்து ஆரோவில்லில் வேலைக்குச் சேர்ந்து சுயமரியாதையுடன் வாழவும், தனது மகனை கல்வி வசதிகளுடன் வளர்க்கவும் முற்படுகிறாள். இச்சூழலில் தனக்கு வேலை வாங்கித் தந்த வெள்ளைக்காரனிடம் சோரம் போகிறாள். தனது தாய் வெள்ளைக்காரனோடு இருப்பதைக் கண்ட ஆறுமுகம் அதிர்ச்சியில் வீட்டை விட்டு ஓடிவிடுகிறான். இப்படி வீட்டை விட்டு ஓடும் ஆறுமுகம் ஒன்பது வயது முதல் பதினேழு வயது வரை சந்தித்த மனிதர்கள், நேர்ந்த அனுபவங்கள் என விரிகிறது இந்நாவல். நகர்ப்புறத்தில் வாழும் குடிசை வாழ்பெண்கள், பாலியல் தொழிலாளிகள், எளிய மனிதகர்ள் என விளிம்பு நிலை மனிதர்கள் குறித்த பதிவுகளும், அவர்களிடம் காணப்படும் தாய்மை,மனிதநேயம், ஆணாதிக்க எதிர்ப்பு, இரக்கம், அன்பு முதலிய மேலான பண்புகளும் இந்நாவலில் காணப்பெறுகின்றன. இவரது ‘செடல்’ எனும் நாவல் பண்டாரம் சாதியைச் சேர்ந்த குழந்தைப் பருவத்திலேயே செல்லியம்மன் கோவிலுக்குப் பொட்டுக்கட்டி விடப்பட்ட செடல் என்கிற பெண்ணின் துயரார்ந்த வாழ்க்கைப் பதிவாக அமைகிறது.
சாதிப் பெருமிதத்தைக் கட்டிக் காப்பாற்ற வெறித்தனமான கௌரவக் கொலைகள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமகாலத்தில் சூழல் பொருத்தத்துடன் வெளிவந்துள்ள படைப்ப இமயத்தின் ‘பெத்தவன்’ குறுநாவலாகும். வடமாவட்டங்களில் பெருமளவில் நிகழும் கௌரவக் கொலைகளின் (கண்ணகி – முருகேசன் படுகொலை) பின்னணியில் இயங்கும் சாதிய சமூக உளவியலை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்துகிறது இப்படைப்பு. தலித் இளைஞன் இளவரசனுக்கும் வன்னிய சாதிப் பெண்ணான திவ்யாவிற்கும் நிகழ்ந்த சாதி மறுப்புத் திருமணத்தின் பின்னணியில் 41 நாட்கள் கழித்து திவ்யாவின் தந்தை நாகராஜன் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வை பெத்தவன் எனப் புனைவாக்கியுள்ளார் இமையம். “இக்கதை அச்சாகி ஓரிரு மாதங்களுக்குப் பின் தர்மபுரியில் நடந்த அழித்தொழிப்பு இக்கதையில் எழுதப்பட்டது போலவே நடந்தது. என் மனம் அதிர்ச்சியில் உறைந்தது என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு கலைஞன் தன் அகக்கண் கொண்டு நடப்பதையும் நடக்கப் போவதையும் கூட துல்லியமாகத் தன் படைப்பில்  கொண்டு வரமுடியும் என்பதற்கான இரத்த சாட்சியாக பெத்தவன் கதை நம்முன்னே பிரச்சனமாகி கம்பீரமாக நிற்கிறது” என பெத்தவன் கதையின் சிறப்பினையும், படைப்பாளியின் தீர்க்கதரிசனத்தையும் வியந்துரைக்கிறார் ச. தமிழ்ச்செல்வன்.
தலித் இளைஞனைக் காதலிக்கும் ஆதிக்க சாதிப் பெண் பாக்யம் குடும்பத்திற்கு ஒரே பெண். சாதிய அகமணக் கட்டமைப்பை மீறியததால் அவளை கௌவரக் கொலை செய்ய வேண்டுமென அவள் தந்தை பழனிக்கு ஊர்-சாதிப் பஞ்சாயத்து கட்டளை இருக்கிறது. ஒருபுறம் பாசத்திற்குரிய மகள், மற்றொரு புறம் ஊர் கட்சி, சாதிக் கட்டுப்பாடுகளுக்கு முன் கலங்கி நிற்கும் சாதிக் கௌரவம் என இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையை ஒத்த மன அவஸ்த்தை. இந்நிலையில் ஒரு தந்தையின் மனவோட்டமும் மகளின் எண்ணப்போக்கும் சுற்றத்தாரின் சாதியத்துவேஷம் என இச்சமூகத்தின் இயக்கத்தில் வெகுவான தாக்கத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் சாதிய உளவியலின் குரூர முகங்களை தத்ரூபமாகக் காட்சிப்படுத்துகிறார் இமையம். இறுதியில் அந்த அபளைத் தந்தை தனது மகளைக் கொள்ள மனமின்றி காதலனோடு சேர்ந்து வாழும்படி வழியனுப்பி வைத்துவிட்டு ஊர் சாதிப் பழிக்கு அஞ்சி தற்கொலை செய்து கொள்கிறார்.
“விசியம் தெரிஞ்சப்பவே அவளக் கொன்னுருந்தா நீ ஆம்பள. அதும் முடியலியா மூணு நாலு வாட்டி ஓடிப்போனாளே அப்ப என் மானம் ரோசமெல்லாம் எங்க போச்சி? அதெ வுடு, ஊருப் பஞ்சாயத்தில் மூணுவாட்டி ஒம்பொண்டாட்டி தவண வாங்குனாளே அன்னிக்காச்சும் அவ கதய முடிச்சியிருக்கனும். எல்லாத்தயும் வுட்டுட்டு வந்து இந்தப் பேச்சு பேசுற?” என்று சலித்துக் கொண்ட கட்சிக்காரப் பையன் “நீயெல்லாம் ஒரு அப்பனா? நீயெல்லாம் இந்தச் சாதியில் பொறந்ததாலதான் இந்தச் சாதிய ஒரு பயலும் மதிக்கமாட்டங்கிறான். நாளக்கி ஒம்மவ பொணம் சுடுகாட்டுல வேவணும். இல்லன்னா ஒம்  பொணம்தான் வேவும். ஞாபகத்தில வச்சிக்க. ஊருக்காரன ஒம்மவ பொட்டப் பயலுவோன்னு நெனச்சிக்கிட்டாளா? இந்த மாரி ஒண்ணு ரெண்டு தேவிடியாளுவோ இருக்கிறதாலதான் நம்ப சாதிக்கி மரியாதியே இல்லாமப்போவுது. ஒம்மவளுக்கு நம்ம பயலுவள ஒருத்தனயுமே கண்ணுல படலியா?” (பெத், 11) என வசைப்படும் இந்தச் சாதியச் சமூகத்தின் முன்பு துணியவியலாத, துணிந்து முடிவெடுக்க வியலாக தந்தைமார்கள்தான் அதிகம் என்பதே சமூக யதார்த்தம். இதனைச் சிறிதும் பிரச்சார நெடியின்றி உணர்வுப்பூர்வமாகக் கதைப்படுத்தியிருக்கிறார் இமையம். இவரது சிறுகதைகளும் பெருமளவில் தலித் மக்களின் வாழ்வியலைப் பின்புலமாகக் கொண்டே இயங்குகின்றன. முதியவர்கள், பெண்கள், சிறார்கள் முதலிய ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தாம் இவர் கதைகளில் அதிகமாகத் தென்படும் பாத்திரங்கள். பிற தலித் படைப்பாளர்கள் தம் புனைகதைகளில் ‘கதைமொழி’ தனிச்சிறப்பு மிக்கதாகக் கருதப்படுவதைப் போலவே இமையத்தின் கதைமொழியும் தனிச்சிறப்புடையது. இவர் தலி மக்களின் எளிமையான பேச்சு மொழியினை தமது புனைகதை மொழியாக பயன்படுத்துகிறார். இப்புனைகதை மொழி எளிமையாக இருப்பினும் ஆழமானது. மக்களின் பண்பாட்டு வேர்களை அடையாளங்களைக் கொண்டது. அழகியல் வளமிக்கது. எனவேதான் இமையத்தின் ‘புனைகதை’ மொழி தமிழ் இலக்கிய வெளியில் வெகுவான ஈர்ப்பினைப் பெற்றிருக்கிறது