Sunday 27 October 2019

எங்க ஊரு பாட்டுக்காரனும் ஓர் இனவரைவியல் தகவலும்

தமிழ் சினிமாவில் மக்கள் நாயகனாக வளம் வந்த ராமராஜனுக்கு ‘டவுசர்’ என்ற பெயரும் உண்டு என்பது எல்லோரும் அறிந்ததே. இந்தப் பெயர் வரக்காரணம் “எங்க ஊரு பாட்டுக்காரன்” படம்தான். இந்த படத்தில் அசல் மாடு மேய்ப்பாளராகவே நடித்திருக்கும் ராமராஜன் பெரும்பாலான காட்சிகளில் டவுசருடன் நடித்திருப்பார். (புரட்சித்தலைவரின் நடிப்பில் வெளிவந்திருக்கிற “மாட்டுக்கார வேலன்” திரைப்படத்தினையும் நினைத்துக்கொள்வோம்). இந்தப் படத்தில் டவுசர் என்ற எள்ளலை மட்டும் இராமராசன் பெறவில்லை. இன்றளவும் “பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி” என்ற பாடலோடு இடம்பெறும் காளையினைப் பாட்டுப்பாடி அடக்கும் காட்சிக்காகவும் எள்ளி நகையாடப்பட்டுக் (ஓட்டபட்டுக்) கொண்டிருக்கிறார்.
     இந்த பாட்டின் தொடக்க காட்சியில் அவிழ்த்துவிடப்பட்ட காளையின் பூர்வீகத்தை ஒரு சிறுவனிடம் ராமராஜன் கேட்பார். அதற்கு அந்தச் சிறுவன் “ பொதும்பு கூலு சேர்வையோட கிடமாட்டுக் கண்டு பேச்சி வகையறா” என்பான். அதற்குப் பிறகுதான் “பேச்சி பேச்சி நீ பெருமையுள்ள பேச்சி....” என்ற பாடல். அதில் என்ன என்கிறீர்களா? அதுதான் இனவரைவியல்.
     மாடுகள் வாய் பேசாத குறை ஒன்றுதான். மற்றபடி மனிதர்களுக்கு உள்ள எல்லா அறிவும் அவைகளுக்கும் உண்டு என்கின்றனர் கீதாரிகள். ஒரு கிடையில் நூறு முதல் ஆயிரக்கணக்கான மாடுகள் இருப்பினும் ஒவ்வொரு மாட்டிற்கும் பெயரிட்டு உள்ளனர். ராமு, பொடுசு, சிங்காரி, பேச்சி, செருவாயி, பாம்பு, மைனா... என இப்பெயர்கள் ஒவ்வொரு மாட்டிற்கும் சந்ததி சந்ததியாகத் (வகையறா) தொடரும் பெயர்கள் ஆகும். பேச்சி என்று ஒரு கிடைமாட்டிற்குப் பெயர் இருந்தாள் அது பேச்சி வகையறா. அதன் ஆதித் தாய் பேச்சி. பால் கறக்கும் போது உரிய பெயரைச்சொல்லி அழைத்தவுடன் அப்பெயருக்கு உரிய மாடும் கன்றும் அழைத்த மேய்ச்சலாளியிடம் வந்துவிடுகின்றன. இரண்டு மாடுகள் ஒரே பெயரில் இருப்பின் முதலில் மூத்த மாடு வருகிறது. அது சென்றபின் மீண்டும் அழைத்தால் இளைய மாடு வருகிறது. எவ்வளவு பெரிய மந்தையாக இருந்தாலும் ஒவ்வொரு மாட்டிற்கும் இப்பெயர்களைப் போல் தனித்தன்மை வாய்ந்த குறியீடுகள் இருப்பதைக் காணமுடிகிறது. அவை மேய்ச்சலாளர்களுக்கும் ஆநிரைகளுக்கும் இடயிலான தொடர்பு மொழியாக இயங்குகின்றன. ((*“மா – கிடைமாட்டுக் கீதாரிகளின் பண்பாட்டு வரைவு” என்கிற ஆவணப்படதிற்கான கள ஆய்வின் வழி).
    
     எத்தனையோ தமிழ் சினிமாக்கள் காளை அடக்குவதைப் பற்றி பதிவு செய்துள்ளன அத்துனையும் இனவரைவியலுக்குப் புறம்பானவை.(அப்படி என்றால் உண்மைச் சம்பவத்திற்குத் துளியும் தொடர்பில்லாதவை). ஆனால் எங்க ஊரு பாட்டுக்காரன் ஒரு நுட்பமான இனவரைவியல் பார்வையினை பதிவு செய்திருக்கிறது. அந்த நுட்பமான இனவரைவியல் ராமராஜனை பகடி செய்வதற்காகப் பயன்பட்டுவிட்டது. சினிமா எனும் நிழலில் நிஜங்களை நெருங்கினால் இப்படித்தான் நிகழும் போல.

தகவலின் நம்பகத்தன்மைக்காக மேலும் ஒரு தகவல்

இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் கங்கை அமரன் என்றாலும் கதை – திரைக்கதை சங்கிலிமுருகன். இவரது சொந்த ஊர் மதுரையிலிருந்து அலங்காநல்லூர் செல்லும் வழியில் உள்ள பொதும்பு. இவர் நிறைய கிடைமாடுகள் வைத்திருந்திருக்கிறார். இவரிடம்தான் முதன் முதலாக நாற்பது கிடைமாடுகள் வாங்கி மேய்க்கத் தொடங்கினேன் என்று எனது சின்ன தாத்தா வடபழஞ்சி மனப்பட்டியினைச் சேர்ந்த சின்னுக்காளை கீதாரி சொன்னார்.