க.சி.பழனிக்குமார்
70 வயதைக் கடந்த மூதாட்டிகள் பலர் இன்னும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எம்ஜிஆரின் சித்திரத்தை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிப்பதைக் காண முடிகிறது. 80 வயதைக் கடந்த, நினைவுகள் தடுமாறிப் போன முதியவர்கள் இன்னும் எம்ஜிஆர் ஆட்சி செய்து கொண்டிருப்பதாகக் கற்பனையில் உள்ளதைக் காண முடிகிறது. இப்படி தமிழ்ச் சமூக மனவெளியின் அடுக்குகளில் எம்ஜிஆர் எனும் பிம்பம் அழுத்தமாக படிந்துள்ளது எவ்வாறு சாத்தியப்பட்டது?
தமிழ்நாட்டு சினிமா மற்றும் அரசியல் களங்களில் அசைக்க முடியாத ஆளுமையாக திகழ்ந்த எம்ஜிஆர் எனும் பேருரு குறித்த கட்டுக்கடங்காத புனைவுகள், நாட்டார் வழக்காறுகள், வதந்திகள், தெய்வாம்சம் கொண்ட கட்டுக்கதைகள்… என மக்காத குப்பைகள் தமிழ்நாட்டின் பட்டி தொட்டிகளில் ஆங்காங்கே பரந்து கிடப்பதைக் காண முடிகிறது.
வாழ்ந்த காலத்தில் மூன்று முறை இறந்து உயிர்த்தெழுந்ததாக நம்பப்படும் எம்ஜிஆர்., மெரினா கடற்கரையில் சமாதி அடைந்தப் பிறகு நல்ல காலம் மீண்டும் உயிர்த்தெழவில்லை. ஆனாலும் சந்தனப் பேழைக்குள் அந்தக் கடிகாரம் மட்டும் இன்னும் செயலிழக்க வில்லையாம்!
அப்படி சினிமாவிலும் அரசியலிலும் எம்ஜிஆர் என்ன சாதனை நிகழ்த்தினார்? அவை உண்மையில் சாதனைகள் தானா? என்கிற இயல்பான கேள்விகளை முன்வைத்து அடித்தள மக்கள் பார்வையினூடாக எம்ஜிஆரின் திரைத்துறை மற்றும் அரசியல் பயணத்தை ஆராய்ந்துள்ளார் எம் எஸ். எஸ். பாண்டியன். இவரது “ பிம்பச் சிறை – எம்.ஜி. ராமச்சந்திரன் திரையிலும் அரசியலிலும்” எனும் இவ் ஆய்வு நூல், எம்ஜிஆரின் 11 ஆண்டுகால ஆட்சியை “சுருக்கமாக, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலம் ஏழைகளிடம் மகத்தான ஆதரவைப்பெற்ற, ஆனால் பணக்காரர்களின் நலன்களுக்காக பாடுபட்ட…” தமிழ்நாட்டின் இருண்ட காலம் என்று அறிவிக்கிறது. எம்ஜிஆர் ஆட்சியில் பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆனார்கள். ஏழைகள் மேலும் ஏழைகள் ஆனார்கள் என தரவுகளோடு நிறுவுகிறது.
தமிழ்ச் சமூகத்தின் பெரும்பான்மையினரான அடித்தள மக்களிடம் நிலவும் மரபு சார்ந்த நாட்டார் வழக்காற்றியல் நம்பிக்கைகளை தமது மிகை ஒப்பனையின் மூலம் அறுவடை செய்து, அவற்றின் பதறுகளை அம் மக்களின் மனங்களில் விதைத்து நிழலிலும் நிஜத்திலும் ஒரு மாபெரும் நாயகனாக உருவானவர் தான் எம்ஜிஆர் எனும் பிம்பம் என்பதை இந்நூலை வாசிப்பதன் வழி அறிய முடிகிறது.
படகோட்டி திரைப்படத்தில் மீனவ நண்பனாக நடித்த எம் ஜி ஆர் தமது ஆட்சி எந்திரத்தால் மீனவர்களைச் சுட்டுக்கொன்றார். விவசாயி திரைப்படத்தில் விவசாயியாக நடித்த எம் ஜி ஆர் ஆட்சியில் தான் கடவுள் எனும் முதலாளியால் கண்டெடுக்கப்பட்ட விவசாயிகள் மீது வாகைக்குளத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. பொன்மனச் செம்மலின் ஆட்சியில் தான் தமிழ்நாட்டில் காவல் கொட்டடி மரணங்கள் அதிகம் நிகழ்ந்தன என்றால் அதனை நம்ப இயலுமா ஆனால் அதுதான் நடந்தது. 1977 முதல் 1981 வரை ஒவ்வொரு 10 நாளுக்கும் ஒரு விசாரணக் கைதி சிறையில் இறந்திருக்கிறார் என்பதனை இந்நூலில் புள்ளி விவரங்களோடு தருகிறார் எம். எஸ் . எஸ் பாண்டியன். ஏறக்குறைய எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் தான் தமிழ்நாட்டில் நக்சல்பாரி இயக்கம் வேர் கொண்டு எழுந்ததும் வீழ்ந்து போனதும் நடந்தது என்பது சற்று கூர்ந்து நோக்கினால் புலப்படும். எம்ஜிஆர் ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து அவர் உயிர் துறக்கும் வரை 20க்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் பதவி விலகி உள்ளனர் என்பது இந் நூலின் மூலம் அறியப்படும் மற்றொரு செய்தி.
ஆனாலும் நிழல் நாயகன் எம் ஜி ஆர் பிம்பத்தின் மீது எந்த ஒரு கரையும் படியவில்லை. ஏனென்றால் நிழலையும் நிஜத்தையும் மக்கள் பகுத்தறிய இயலாதபடி ஓர் அபினை ஒத்த அடித்தள மக்களின் நுகர்பொருளாக எம்ஜிஆர் தமது பிம்பத்தைக் கட்டமைத்து இருந்தார். (முதலில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு எம்ஜிஆரின் இத்தகைய பிம்பம் நன்கு வருமானம் ஈட்டித் தந்தது. பிற்காலங்களில் எம்ஜிஆர் அரும்பாடு பட்டு தனது பிம்பத்தை த் தக்க வைத்துக் கொண்டார்).
இன்றைய காலத்திலும் தமிழ்நாட்டு அரசியலில் களம் புகும் புதிய மின்மினிகள் உதிர்க்கும் வாக்குறுதியான, “ஊழலை ஒழிப்பேன்!” என்கிற வாக்குறுதியோடுதான் எம்ஜிஆர் தனது கட்சியைத் தொடங்கினார். (அனங்காபுத்தூர் ராமலிங்கம் என்னும் சாதாரண கைத்தறி தொழிலாளி ஒருவர் தான் எம்ஜிஆரின் கட்சிக்கு அ இ அ தி மு க எனும் பெயரை பரிந்துரைத்தார் எனும் புனைவும் நிலவுவதாக இந் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது). ஆனாலும் அவர் ஆட்சியில் ஊழலுக்கு ஒரு குறையும் இல்லை. எனினும் ஊழல் ஆட்சிக்கு எம்ஜிஆர் தான் காரணம் என்பதை ஏற்கும் நிலையில் மக்கள் இல்லை. அமைச்சர்களும் அதிகாரிகளும் தான் எம்ஜிஆர் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்துகிறார்கள் என்று மக்கள் நம்பினார்கள் என்றால் என்ன ஒரு விசித்திரம்!
‘ தமிழ்நாட்டில் மதுவை ஒழிப்பேன்!’ என்று என்று தனது அன்னை சத்யாவின் மீது சத்தியம் செய்துவிட்டு வந்த புரட்சித் தலைவர் தான் தமது ஆட்சியில் டாஸ்மாக்கை தொடங்கினார். அரசின் வரி வருமானத்தை கலால் வரியின் மூலம் பெருக்கிக் கொள்ளும் நடைமுறையை உருவாக்கிய பிதாமகர் எம்ஜிஆர். இவரது ஆட்சியில் நிலப் பிரபுக்களுக்கும், செல்வந்தர்களுக்கும் வரிச்சலுகைகள் வழங்கப்பட்டன. இதனால் அரசின் வரி வருவாய் முந்தைய ஆட்சிகளை விட இவரது ஆட்சியில் கணிசமாகக் குறைந்தது. ஏழை எளிய மக்களுக்கு பெரிதான வரிச் சுமை இல்லை என்றாலும் கூட அவர்களின் வாழ்வாதாரங்களை முன்னேற்றம் அடையச் செய்யும் எந்த ஒரு முயற்சியையும் எம்ஜிஆர் அரசு மேற்கொள்ளவில்லை. மேலும் நடுத்தர மக்கள் பயன்படுத்தக்கூடிய அத்தியாவசியப் பொருட்களுக்கு வரிகள் உயர்த்தப்பட்டு அம்மக்கள் வரிச். சுமைக்கு ஆளானார்கள் என்பதனையும் இந்நூலின் வழி அறிய முடிகிறது.
குறிப்பாக எம்ஜிஆர் ஆட்சிப் பொறுப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. அவர் கலைஞர் மு. கருணாநிதிக்கு பாடம் புகட்டுவதில் மட்டுமே கருத்தாய் இருந்தார் என்று நூலாசிரியர் கருதுகிறார்.
‘எம்ஜிஆருக்கு இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளம் எப்படிக் குவிந்தத!’ என்பது குறித்து நூலாசிரியர் முன் வைத்துள்ள ஆய்வு முடிவுகள் குறிப்பிடத்தக்கவை. பெரும்பாலான திரைப்படங்களில் அடித்தட்டு ஏழை எளிய மக்களின் பாத்திரங்களை ஏற்று நடிக்கும் எம்ஜிஆர்., அவர்களின் பண்பாட்டுக் கூறுகளை பிரதிபலிக்கும் உணவு, உடை உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துகிறார். குறிப்பாக ஏழை நாயகனாத் தோன்றும் எம்ஜிஆர் செல்வ சீமாட்டி நாயகிகளை திருமணம் முடிக்கிறார். சில சமயங்களில் நாயகிகளின் திமிர்த்தனங்களை சாத்வீகமான முறையில் அடக்குகிறார். இத்தகைய கதைக்கோப்பு வறுமையில் வாடும் கிராமப்புற மற்றும் நகர்ப்புற இளைஞர்களின் உளவியல் சிக்கல்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்து விடுகிறது. மேலும் எம்ஜிஆரின் சில திரைப்படங்கள் கல்வி மற்றும் எழுத்தறிவுக்கு முதன்மை அளித்தன. கல்வி மற்றும் எழுத்தறிவு என்பது உயர் தட்டினருக்கு மட்டுமல்ல அனைத்து மக்களுக்கும் பொதுவானது எனும் திராவிட இயக்கத்தின் வலுவான கருத்தியலை எம்ஜிஆர் திரையின் ஊடாகப் பிரதிபலித்தார். இத்தகைய அறிவு பொதுமையாக்கக் கருத்துகள் அடித்தள மக்களிடையே அவரின் மௌசை ஏற்றி விட்டன.
எம்ஜிஆருக்கு கிராமப்புறம் சார்ந்த பெண் ரசிகைகள் அதிகம். பெரும்பாலான எம்ஜிஆர் திரைப்படங்களில் வில்லன்கள் காமுகர்களாகவும் பெண்களை ஏமாற்றுபவர்களாகவும், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் ஆகவும் இடம்பெருகிறார்கள். ஆனால் நாயகனாகத் தோன்றும் எம்ஜிஆர் பெண்களை காக்கும் பாதுகாவலனாகத் தமது பிம்பத்தைக் கட்டமைத்துக் கொள்கிறார். இத்தகைய உத்தி கிராமப்புற பெண்களின் உளவியலில் பாதுகாப்பு உணர்வு சார்ந்த ஒரு வசீகரத்தை எம்ஜிஆர் மீது ஏற்படுத்தி விடுகிறது.
அடித்தள மக்களிடையே அதிகாரத்தோடு முரண்பட்டுப் பயணிக்கும் உண்மை நாயகர்கள் அவ்வப்போது தோன்றி மறைகிறார்கள். மதுரை வீரன், முத்துப்பட்டன், தொடுக்கூர் ஆறுமுகம் மற்றும் சமூக கொள்ளையர்கள் முதலியோர் இவ்வகையினர் ஆவர். நாட்டார் வழக்காற்று கதைப்பாடல்களின் வழி மேற்குறித்த நாயகர்களை அடித்தள மக்கள் மீண்டும் மீண்டும் ஓர்மை கொள்கிறார்கள். எனினும் இவை வட்டாரத் தன்மை எனும் எல்லைக்குட்பட்டவை ஆகும்.
மதுரை வீரன், படகோட்டி, விவசாயி, ஏழைத் தொழிலாளி, மாட்டுக்கார வேலன், ரிக்ஷாக்காரன்... முதலிய அடித்தள மக்கள் பிரிவைச் சார்ந்த நாயகனாக நடித்துள்ள எம்ஜிஆர் திரைப்படத்தின் ஒரு பகுதியில் துண்டை தோளில் போட்டுக் கொள்ளுதல், தலைப்பாகை கட்டுதல் முதலிய மேலாதிக்க மற்றும் அதிகார எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு அடித்தள மக்களின் எதிர்ப்புணர்வுக்கு வடிகால் அமைத்துத் தருகிறார். மறுபாதியில் அதிகார வர்க்கத்தைச் சீர்திருத்தி உண்மையான முரணை நமத்து போகச் செய்து சமரசம் செய்து வைக்கிறார். கொடுமையான நில பிரபு நல்ல நிலப் பிரபுவாகவும், கொடுமையான முதலாளி நல்ல முதலாளியாகவும் மனமாற்றம் அடைகின்றனர். அடித்தள மக்கள் X அதிகார வர்க்கம் இடையிலான உண்மையான முரணைப் பேசும் எம்ஜிஆர் திரைப்படங்கள், சாத்தியமில்லாத கனவுத் தீர்வுகளை கிளைமாக்ஸாகக் கொண்டுள்ளன. எம்ஜிஆர் திரைப்படங்களில் வழங்கும் நீதி அடித்தள மக்களுக்கான அநீதி என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனாலும் அவர் திரைப்படங்களின் முதற்பாதி அந்த அநீதியை அடித்தள மக்கள் மனது உணரா வண்ணம் திரையிட்டு விடுகிறது.
சென்னையில் குடிசைகள் எரிந்த போது எம்ஜிஆர் நிதி வழங்கினார், இந்திய சீனப் போரின் போது தனது 110 சவரன் தங்க வாளை ஏலம் விட்டு நிதி வழங்கினார். இவை போன்ற நிகழ்வுகளை ஊடகங்களின் மூலம் விளம்பரப்படுத்தினார். தமது பிம்பத்தை உருக்குலையாமலும், அதற்கு ஒரு இடையூறு நேராமலும் பார்த்துக் கொண்டார். தம்மை ஓர் இளைஞனாகக் காட்டிக் கொள்வதற்காக ஜெயலலிதா, லதா, மஞ்சுளா போன்ற இளம் கதாநாயகிகளுடன் கதாநாயகனாக நடித்தார்.
திமுக கட்சி சார்ந்த நடிகராக எம் ஜி ஆர் இருந்தபோது தான் நடிக்கும் படங்களில் திமுக கட்சிக் கொள்கை,, கொடி முதலியவற்றை முன்னிலைப்படுத்தினார். இவற்றை முன்னிலைப்படுத்தியதன் மூலம் திமுகவில் எம்ஜிஆர் தன்னை முன்னிறுத்திக் கொண்டார் என்பது எனது கருத்து.
எம்ஜிஆரால் சத்துணவுத் திட்டமாக விரிவுபடுத்தப்பட்ட மதிய உணவுத் திட்டம், இத்திட்டம் குறித்த விளம்பரங்கள், இத்திட்டம் தொடர்பாக மேற்கொண்ட பரப்புரைகள் அவருடைய ஆட்சியின் புகழை(?) ஓர் அழியாச் சுடராக எளியோர் மனதில் நிலை பெறச் செய்துவிட்டன.
சில சுவையான தகவல்கள் இந் நூலில் இடம் பெற்றுள்ளன. “பிரபல தமிழ் வார இதழான, ஜூனியர் விகடனின் நிருபர் ஒருவர், உள்ளூர் மக்களுக்கு எதிராகப் பரவலாக நடைபெறும் காவல்துறை அட்டூழியங்கள் பற்றி விசாரிக்க வேப்பந்திட்டை எனும் கிராமத்துக்குச் சென்றிருந்தார். அப்போது அங்கேயிருந்த உள்ளூர் பெண்கள் அவரை நோக்கி கையைக் காட்டி, தங்களுக்குள் இப்படி முணுமுணுத்துக் கொண்டார்கள், ‘(உண்மையைக் கண்டறிய) எம்.ஜி.ஆர்தான் இவரை அனுப்பி இருக்கணும்...’ என்று சொன்னதாகத் தன்னுடைய கட்டுரையில் சுவையாகக் குறிப்பிடுகிறார்.”
எம்ஜிஆர் சிறுநீரக பாதிப்பால் அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தபோது, அவரின் தீவிர ரசிகர் ஒருவர் தமது உடல் முழுக்க பிளேடால் அறுத்துக் கொண்டு இரத்தம் சிந்தி எம்ஜிஆர் உயிர் பெற வேண்டும் என்று வேண்டியுள்ளார். அவரிடம் ஒரு நிருபர், ‘தாங்கள் ரத்தம் சிந்துவதற்குப் பதில் தங்களுடைய சிறுநீரகத்தைக் கொடுத்தால் எம்ஜிஆரை குணப்படுத்தி இருக்கலாமே என்று கேட்கிறார். அதற்கு அந்த ரசிகர், “என்னது!, எவ்வளவு அழகான நேர்த்தியான கம்பீரமான மனிதருக்கு என்னுடைய சிறுநீரகத்தைப் பொருத்துவதா?” என்று அதிர்ச்சி அடைந்துள்ளார்.
எம்ஜிஆர் வாழ்க்கை குறித்த புனைவுகள் மட்டுமே அன்றைய ஊடகங்கள், பிரச்சாரங்கள், சுவரொட்டிகள் முதலியவற்றின் மூலம் மிகைப்படுத்திப் பரப்பப்பட்டன. மூன்று திருமணங்கள் முடித்த அவரின் சொந்த வாழ்க்கை குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. குறிப்பாக தனது முதல் மனைவியின் சாயலில் உள்ள ஜானகியை அவருடைய கணவர் உயிருடன் இருக்கும்போதே மூன்றாவதாகத் திருமணம் செய்து கொண்டார் எம்ஜிஆர். இதற்குக் காரணம் ஜானகி எம்ஜிஆரின் முதல் மனைவியைப் போல் இருந்தார் என்று கதை கட்டப்பட்டது. இந்தக் கதையினை தனது இருவர் படத்தில் மீள் கதை ஆக்கியுள்ளார் மணிரத்தினம். எம்ஜிஆர் மூன்றாவது திருமணம் முடித்த போது எம்ஜிஆரின் முதல் மனைவியும் உயிருடன் இருந்தார். அவரது ஒப்புதலுடனே இந்தத் திருமணமும் நடைபெற்றது. சினிமாவில் குடும்பக் காவலனாக வலம் வந்த எம்ஜிஆர் நிஜ வாழ்வில் குடும்பத்தைக் குலைப்பவராக இருந்தார் என்று எம். எஸ். எஸ் பாண்டியன் குறிப்பிடுகிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் பின்னிப்பிணைந்துள்ள
சினிமாவும் அரசியலும் அவ்வப்போது மோடி வித்தைகளை நிகழ்த்தும் வித்தைக்காரர்களை உற்பத்தி செய்கின்றன. அவர்கள் கானல் நீரை கடல்நீராக உருப்பெருக்கிக் காட்டுகிறார்கள். இந்த மாயத்தில் மதி மயங்காமல் இருக்க, எம்ஜிஆரின் அரசியல் பிம்பம் குறித்து இன்னும் ஆழமான புரிதலைப் பெற தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர் சமூகமும், உயர் கல்வி பயிலும் மாணவர் சமூகமும், குறிப்பாக எம்ஜிஆர் வாத்தியார் என்று அழைக்கப்பட்டதற்காகவாவது ஆசிரியர் சமூகமும் இந்த நூலை அவசியம் வாசிக்க வேண்டும்.
“எம்.ஜி.ஆர். நாற்பது ஆண்டுகாலம் தமிழ் சினிமாவை ஆண்டார். 10 ஆண்டுகாலம் தமிழக முதலமைச்சராக நடித்தார்” என்று பாரதி கிருஷ்ணகுமார் ஒரு மேடையில் சொன்னார். எம்.ஜி.ஆர். என்ற கனவு உலகுக்குப் போய் கனவைக் கலைத்து, அறிவை இழுத்துவருகிறது எம்.எஸ்.எஸ். பாண்டியனின் சிந்தனைகள்”
என்று இந்த நூலின் முன்னுரையில் மிகச் சரியாகக் குறிப்பிடுகிறார் ப. திருமாவேலன்.
எம்ஜிஆர் இறந்தப் பிறகு 1989 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்த இந்த நூல், எம் எஸ் எஸ் பாண்டியன் இறந்தப் பிறகு 2016 ஆம் ஆண்டு பூ. கொ. சரவணன் மொழிபெயர்ப்பில் தமிழில் வெளிவந்தது. பிரக்ஞை பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.
நூல் : பிம்பச் சிறை
நூலாசிரியர்: எம்.எஸ்.எஸ்.பாண்டியன்
தமிழில்: பூ.கொ.சரவணன்
முதற்பதிப்பு : ஜூன், 2016
இரண்டாம் பதிப்பு : பிப்ரவரி, 2021
பக்கங்கள் : 256
விலை: ரூ. 299
வெளியீடு : பிரக்ஞை பதிப்பகம்.