அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் 19ஆம் நூற்றாண்டுப் பகுத்தறிவு இயக்கத்தின் முன்னவர்!
மிகச் சமீபத்தில் தோழர் குமரன் மூலம் ந. கோவிந்தராஜன் காய்ச்சல் என்னைத் தொற்றிக் கொண்டது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு வாங்கி பத்திரப்படுத்தி வைத்திருந்த அதிகாரமும் தமிழ் புலமையும் எனும் அவருடைய நூலை வாசித்ததன் வழி காலணிய அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்ப் புலமை மரபின் நேர் எதிரான இரு போக்குகள் (கிண்டர்ஸ்லீ X எல்லீஸ்) குறித்து அறிய முடிந்தது. இந்த நூல் தந்த உந்துதல் அவர் இயற்றிய 'மொழியாகிய தமிழ்' மற்றும் 'வெள்ளை நாக்குகளும் தமிழ்க் காதுகளும்' ஆகிய இரண்டு நூல்களையும் வாசித்து விட வேண்டும் என்கிற ஆர்வத்தைத் தூண்டியது. கடந்த வெள்ளிக்கிழமை முதல் இந்த இரண்டு நூல்களையும் மதுரை நகரத்தின் புத்தகக் கடைகளில் தேடித்தேடிக் கிடைக்கவில்லை.
இதே மதுரையில் பாண்டித்துரை தேவர் திருக்குறளையும் கம்பராமாயணத்தையும் தேடித்தேடி ஏமாந்ததைப் போல, ந. கோவிந்தராஜன் எனும் மதுரைக்காரர் எழுதிய புத்தககங்கள் இந்த மதுரையிலேயே கிடைக்கவில்லையே! 'என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை!' என்று சோர்ந்துபோய் விட்டேன்.
போதாக்குறைக்கு நேற்று காலை 'அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார்' குறித்துப் பகிர்ந்து கொண்ட தோழர் குமரன், வீ. அரசு அவர்களின் பதிப்பில் ‘அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் ஆக்கங்கள் திரட்டு' நூலை என் சி பி ஹெச் வெளியிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்தப் புத்தகத்தையாவது வாங்கிவிட வேண்டும் என்று மதுரை என் சி பி ஹெச் சென்றேன். காலையில் தான் ஒருவர் வாங்கிச் சென்றார் என்றார்கள் (வேறு யாரும் அல்ல தோழர் குமரன் தான்). ஒரு வழியாக மீந்திருந்த ஒரு பிரதியைத் தேடி எடுத்துக் கொடுத்தார்கள். சோர்விற்கு ஓர் ஆறுதல்!
2013 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த நூலின் முதல் பகுதியில், “இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பார்ப்பனர் அல்லாதவர் உரிமைகளுக்காக பெரியார் போராடத் தொடங்கினார். அவருக்கு முன் ஒடுக்கப்பட்ட பறையர் மக்களின் உரிமைக்காக அயோத்திதாசர் போராடினார். அவருக்கு முன் ஒடுக்கப்பட்ட வன்னிய மக்களின் உரிமைக்காக அ. வெங்கடாசலனார் போராடியுள்ளார். அண்மைக் காலங்களில் அயோத்திதாசர் பொதுவெளியில் விரிவாக அறிமுகமாகியுள்ளார். அ. வெங்கடாசலனாரும் அவ்வகையில் அறியப்பட வேண்டியவர். வரும் காலங்களில் அது நிறைவேறலாம். ஒடுக்கப்பட்ட சாதி மக்களுக்குப் போராடியவர்கள் என்றே இவர்களைப் புரிதல் அவசியம்; மாறாக சாதிய அடையாளத்தை முன்னிறுத்திப் புரிந்து கொள்ளும் நிலை உருவாகலாம். அ. வெங்கடாசலனார், அயோத்திதாசர் ஆகியோர் செயல்பட்ட காலங்களில் இருந்த சாதியம் குறித்த புரிதலும் இன்றைய புரிதலும் வேறாக இருக்க வேண்டும். அண்மையில் உருவாகி வரும் சாதியக் கட்சிகளின் அடையாளங்களாக இவர்களை கட்டமைக்கும் விபத்து நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிகுதி. இத்தன்மை குறித்த புரிதலோடு செயல்படுவது அவசியம்” என்று வீ. அரசு குறிப்பிடுகிறார் என்ற போதும் அயோத்திதாசருக்கு நிகழ்ந்ததைப் போல சாதகமோ பாதகமோ அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனாருக்கு நிகழவில்லை.
ஐந்து பகுதிகளாக அமைந்துள்ள இந்த நூலில், 'பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாகி இருக்கிற விவாதம், தத்துவ விவேசினி கடிதங்கள், இந்துமத ஆசார ஆபாச தரிசினி' ஆகிய வெங்கடாசலனாரின் ஆக்கங்கள் இடம்பெற்றுள்ளன. தொண்டை மண்டலப் பகுதி ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமைக்குப் போராடிய, இந்து மதத்தின் புராணங்கள் மூடநம்பிக்கைகள் சடங்குகள் ஆகியவற்றுக்கு எதிராக 19 ஆம் நூற்றாண்டில் முதன் முதலாகக் குரல் கொடுத்த அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் குறித்த விரிவானதொரு அறிமுகத்தை இந்நூலின் ஒவ்வொரு பகுதியின் முகப்பிலும் வீ. அரசு வழங்கி உள்ளார்.
அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் வாழ்ந்த காலத்தில் அவர் வாழ்ந்த தொண்டை மண்டலத்தின் கலெக்டராக இருந்த எல்லீஸ், 'காலனிய அரசு மிராசு உரிமை குறித்துக் கேட்டிருந்த 17 கேள்விகளுக்கு வழங்கிய பதில்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளது' ஒரு முக்கிய வரலாற்று ஆவணமாகும். தமிழ்ப் புலமைத்தளத்தில் மட்டுமல்லாமல் மண்ணுரிமை மீட்புச் செயல்பாடுகளிலும் அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் தீவிரமாக இயங்கி உள்ளார். ஏழை எளிய வன்னியர்கள் மிராசுகளிடம் இழந்த நிலத்தை போராடி அவர்களுக்கு மீட்டுத் தந்துள்ளார். சுண்ணாம்பு வியாபாரத்தால் தான் ஈட்டிய பொருளை சமூகப் பணிகளுக்காகவும் பயன்படுத்தி உள்ளார்.
16.02.1930 குடியரசு இதழில் தந்தை பெரியார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சுயமரியாதை இயக்கம் என்று அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனாரை குறிப்பிட்டு அவர் இயற்றிய 'இந்து மத ஆசார ஆபாச தரிசினி' நூல் யாரிடமேனும் இருப்பின் அனுப்பி உதவுமாறு வேண்டுகோள் விடுக்கிறார்.
790 பாடல்களை உடைய இந்த நூல் இந்து மதத்தின் மூடத்தனங்களையும், பார்ப்பனியத்தையும், பெண்ணடிமைத் தனத்தையும் விட்டு விலாசும் ஒரு சிற்றிலக்கியமாகும். இந்நூலை தமிழின் முதல் நாத்திக இலக்கியம் என்றோ அல்லது தமிழின் முதல் பகுத்தறிவு இலக்கியம் என்றோ வகைப்படுத்தலாம்.
மொழியியல் மற்றும் இனவியல் ரீதியாக 19ஆம் நூற்றாண்டில் உறுப்பெற்ற திராவிட அடித்தளத்தின் எதிர்காலத்திற்குரிய இலக்கிய முகமாக இந்த நூல் நமக்கு வாய்த்திருக்கிறது. பார்ப்பனப் புலமை மரபிற்கும், சைவத்தமிழ்ப் புலமை மரபிற்கும் நேரதிரான, அதிகாரம் நீக்கம் செய்யப்பட்ட தமிழ்ப் புலமை மரபு 'திராவிடக் கருத்தியலின் இளங்குருத்துகளாக' அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனாரிடம் இருந்து வேர்பிடிக்கிறது.
“நான் பெரிதும் தொண்டாற்றி வரும் பகுத்தறிவை ஆதாரமாகக் கொண்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் இன்றைக்கு 60,70 ஆண்டுகளுக்கு முன்பாகவே மிகத் துணிவோடு தெளிவாக செய்யுள் உருவாய்ப் பாடப்பட்டிருப்பதைக் கூர்ந்து நோக்கினால், சுயமரியாதை இயக்கத்தின் கருத்துக்கள் புதியனவல்ல வென்பதோடு வெகு காலத்திற்கு முன்னதாகவே, அதாவது நான் பிறப்பதற்கு முன்னதாகவே பல அறிஞர்களால் வெளியிடப்பட்ட பழங்கருத்துக்கள் என்பதற்கு ஓர் தக்க சான்றாகும்” என இந்த நூலுக்குரிய மதிப்புரையில் தந்தை பெரியார் குறிப்பிடுகிறார். தோழியர் குஞ்சிதம் குருசாமி, அறிஞர் அண்ணா, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், பேராசிரியர் க. அன்பழகன் முதலிய 24 பேர் வழங்கிய மதிப்புரைகள் நூலின் இறுதிப் பகுதியில் இடம்பெற்றுள்ளன.
திராவிட சிசு, திராவிட வேதம் என முன்னெடுக்கப்பட்ட வைதீகக் கபலீகர முயற்சிகளால் வசப்படுத்த முடியாத திராவிடக் கருத்தியலின் அறுபடாத கண்ணிகள் அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனாரும், ஆயிரம்விளக்கு அயோத்திதாசரும், ஈரோட்டு பெரியாரும் ஆவர். அவர்களில் அத்திப்பாக்கம் அ. வெங்கடாசலனார் 19ஆம் நூற்றாண்டுப் பகுத்தறிவு இயக்கத்தின் முன்னவராகத் திகழ்கிறார்.
அந்த வகையில் வீ. அரசு அவர்களின் இந்தப் பதிப்பு தமிழ்ப் புலமை மரபின் முற்போக்கு/திராவிட வரலாற்றைத் தொகுத்தலில் ஒரு மயில்கல் என்பது ஒருபோதும் மிகை மதிப்பீடு ஆகிவிடாது.
க.சி. பழனிக்குமார்