ஒரு தலைமுறைச் சீற்றம்: ‘கருக்கு’ சில குறிப்புகள்
க.சி.பழனிக்குமார்
90களின் துவக்கத்தில் அம்பேத்கர் நூற்றாண்டு விழாக்
கொண்டாட்டங்களின் பின்னணியில் தமிழ்ச் சூழலில் தலித் அலை பற்றிப்படர்ந்தது.
இதனையொட்டி வளர்ந்த தமிழக தலித் இலக்கியத்தினை உருவாக்கிய மூலவர்களில் பாமாவும்
ஒருவர். இவரது கருக்கு பல்வேறு விசேசத் தன்மைகளைக் கொண்ட படைப்பு.
அதுவரை தமிழ் இலக்கிய உலகம் அறிந்திராத
தன்வரலாற்றுப் புனைவு, குறிப்பாக பென் தன்வரலாற்றுப் புனைவு, அதனினும் குறிப்பாக தலித் பெண் தன்வரலாற்றுப் புனைவு...என
அடுக்கிக்கொண்டே செல்லலாம். பொதுவாக தமிழ்ப் புனைகதை எனும் வெளியை மேல் மரபு அதற்கு எதிரான அடித்தள மரபு /
விளிம்பு நிலை மரபு என்றவாறு பகுக்கலாம். மேல் மரபு எனும் புனைவுத் தடத்தில்
படைப்பாளி பதுங்கிக் கொள்வார். தனிலையைப் புனைவாக்கினும் அதற்குச் சில பல
அலங்காரங்களைச் சூட்டி தப்பித்துக் கொள்வார். இப்போக்கே புனைகதைக்கு உரியது எனும்
இலக்கண அந்தஸ்த்து குறிப்பிட்ட சில காலம் வரை பேணப்பட்டு வந்திருக்கிறது. இதன் மீது
தொடுக்கப்பட்ட முதல் அம்பு என கருக்கைச் சுட்டலாம். ஆம்! கருக்கு ஒரு மரபிற்கான
வித்தாக அமைந்தது. அதனையொட்டி பாரத தேவியின் ‘நிலாக்கள் தூர தூரமாக, முத்து
மீனாளின் ‘முள்’ முதலான பெண் தன்வரலாற்றுப் புனைவுகள் வெளிவந்தன. தொடர்ந்து
சமூகத்தால் ஓரங்கட்டப்பட்ட, நெறிக்கப்பட்ட குரல்வளைகள் தங்கள் தயக்க மயக்கங்களை
உதறித்தள்ளி இலக்கிய நீரோட்டத்தில் சங்கமிக்கலாயினர். இவ்வாறு தமிழ்ப் புனைகதை
வரலாற்றில் அடித்தள மரபு / விளிம்புநிலை மரபிற்கு கருக்கு அச்சாரமிட்டது.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள
ஒரு சிறிய கிராமத்திலிருந்து தன்கதையினைத் தொடங்கும் பாமா, ‘எங்க ஊரு ரொம்ப அழகான
ஊரு. ரொம்பப் பெரிய முன்னேத்தமோ, எதுவுமோ இல்லேன்னாகூட அதோட அழக வச்சுத்தான்
எனக்கு அத ரொம்பப்பிடிக்கும்’.என ஊரின் கதையினைத் தொடங்கும்போது கரிசல் இலக்கியம் கட்டமைத்து வைத்துள்ள
சிலாகிப்பு மனநிலை ஏற்படுவது தவிர்கவியலாதது. அதுவரை பிராமணிய - வேளாள
எழுத்துக்கள் மட்டுமே புலங்கி வந்த இலக்கிய நிலத்தில் பிற்பட்டோர் அல்லது
சூத்திரர் அவர்தம் ஆசுவாசத்தினை கரிசல் இலக்கியப்பரப்பில் வட்டார மொழி வடிவம்
கொண்டு பெற்றுக்கொண்டார்கள். இந்தச் சிலாகிப்புகளும் ஆசுவாசமும் அதே வட்டார மொழி
வடிவத்தோடு வந்துதித்த கருக்கின் வருகைக்குப் பிறகு வலுவிழந்து போனது.
இந்தியச்
சாதியச் சமூகம் காலங்காலமாக தலித்துகளுக்கு இளைத்துக்கொண்டிருக்கும் அநீதிகளை ஒரு
தலித் பெண் தன் பிள்ளைப் பிராயம் தொடங்கி வாழ் நாள் முழுக்கவும், தன் ஊர் தொடங்கி
பயணப்படும் சமூகத்தின் பல தளங்களிலும் எவ்விதம் எதிர்கொள்கிறார். அதற்கு எப்படி
எதிர்வினை புரிகிறார் என்பதுதான் கருக்கின் கதை. இந்தக் கதையினை (பாமாவின் தன்கதை)
பாமா தலித்துகளுக்குச் சொல்லவில்லை. மாறாக சாதி எனும் போர்வையில் சொகுசுகளை
அனுபவித்துக்கொண்டிருக்கும் தலித்
அல்லாதாருக்குச் சொல்கிறார். அவர்களின் மனசாட்சி எப்படியேனும் குற்ற உணர்சியினைப்
பெற்றுடுமா என்கிற எத்தனிப்பு தான் கருக்கின் ஒன்பது அத்தியாங்களும். அந்த
எத்தனிப்பு மனுசி வரை தொடர்கிறது.
வறுமை,
அநீதி, சுரண்டல், இந்தியர்கள் அல்லாதா உலக நாடுகள் வேறெங்கிலும் இல்லாதா தீண்டாமை,
சாதிய ஒடுக்குமுறை என மனிதகுலத்திற்குப் பாதகமான அத்துனை இழிவுகளையும்
தலித்துகளுக்கு இளைத்துக்கொண்டிருக்கும் இந்திய சாதியச் சமூகம் தலித்துகளின்
கண்ணீரில் புன்னகைத்துக்கொண்டிருக்கிறது என்கிற உண்மையினை தன்னை மனித மான்புள்ளவர்
எனக் கருதும் தலித் அல்லாதார் ஒவ்வொருவரும் குற்ற உணர்வோடு ஒப்புக்கொள்ள கருக்கு
நிர்பந்திக்கிறது. நனவிலியிலும் படிந்துள்ள சாதிய மனோநிலையினை அகற்றும்
சீற்றத்துடன் கருக்கு பயணிக்கிறது. கருக்கு மட்டுமல்ல தலித் இலக்கியங்கள் யாவும்
இவற்றைத்தான் கோருகின்றன.
2015 மே மாதம் ஓர் அந்திப்பொழுது
கருக்கு நாவலை வாசித்து முடித்தேன் அதன்
பிறகு சமீபத்தில் இக்கட்டுரைக்காக வாசித்தேன். ஒன்பது அத்தியாங்களை உடைய
இந்நாவலில் சுவாரசியங்களுக்குப் பஞ்சமில்லை. இந்த சுவாரசியங்களின் அடிநாதமாக சாதி
அமைப்பு தலித்துகளுக்கு இளைத்துக்கொண்டு வரும் வன்முறையின் ரேகைகள் ஓடிக்கொண்டே
இருக்கின்றன. உலகின் புகழ்பெற்ற இலக்கியங்களில் காணப்படும் பல சிறப்புத் தன்மைகள்
கருக்கில் உள்ளன. உதாரணமாக இரண்டாவது அத்தியாத்தில் இடம்பெறும் கிராமம் குறித்த
சித்தரிப்புகள் மார்குவேசின் தனிமையின் நூறு ஆண்டுகள் நாவலில் இடம்பெறும் மகோந்தோ
கிராமத்தை நினைவுபடுத்தியது. லத்தின் அமெரிக்க நாடுகளில் வல்லாதிக்க பயங்கரவாத
அரசுகள் நிகழ்த்திய அரச வன்முறைகள் லத்தின் அமெரிக்க இலக்கியங்களின் கருவாக
இடம்பெற்றிருக்கும். எனவேதான் லத்தீன் அமெரிக்க இலக்கியங்கள் உலகளாவிய கவனத்தைப்
பெற்றது. போர் தொடர்கிறது, பெட்ரோ பரோமா போன்ற நாவல்கள் குருதி படிந்த லத்தின்
அமெரிக்க வரலாற்றின் சாட்சியங்களாக இருப்பதைப்போல் இந்தியச் சாதி அமைப்பின் குருதி
படிந்த வரலாற்றின் இலக்கிய சாட்சியங்களில் கருக்கும் ஒன்று..
கருக்கு
புனைவில் இரு அம்சங்கள் பிரதானப்படுத்தப்படுகின்றன. ஒன்று தலித்துகள் உளவியல்
ரீதியாக அனுபவிக்கும் வன்முறை. மற்றொன்று உடல்ரீதியாக அனுபவிக்கும் வன்முறை. இந்த
இரு அம்சங்களையும் பாமா தன் அனுபவத்தின் ஊடாக பகிர்ந்துகொள்கிறார். உடல் ரீதியான
வன்முறைக்கு தலித்துகளுக்கும் சாலியர்களுக்கும் இடையே கல்லறையினை மையமிட்டு
ஏற்படும் கலவரம் ஓர் உதாரணம். தலித்துகளுக்கு சொந்தமான கல்லறையினை சாலியர்கள்
அபகரிக்கத் திட்டமிடுகிறார்கள். சாலியர்கள் பொருளாதார பலம் மட்டுமே உள்ளவர்கள்.
மற்றபடி துணிவற்றவர்கள்.”எங்கதெரு ஆளுகளோட பேச்சுல இருந்து, சாலியப் பெயளுகக்கிட்ட
அம்புட்டு புத்தியோ, வேவரமோ கிடையாதாம். உரக்கப் பேசிட்டாக்கூட
ஒன்னுக்கிருந்துவானுகளாம். அம்புட்டுதான் அவுகளுக்கு இருக்கிற தைரியமாம்,
வீராப்பாம்.”(ப.39) என சாலியர்களின்
கோழைத்தன்மை பதிவு செய்யப்படுகிறது. ஆனால் கடும் உழைப்பாளர்களான தலித்துகள்
நேர்மையானவர்களாகவும் துணிவு கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். அப்படி இருக்க
காவல் துறையினையும் அரசினையும் கட்டுக்குள் வைத்துக்கொண்டு சாலியர்கள் தலித்துகள்
மீது வன்முறையினை ஏவுகிறார்கள். மூன்றாவது அத்தியாத்தில் விவரிக்கப்படும்
காவல்துறையின் அராஜகம் தெலுங்கானா போராட்டத்தின்போது கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த
ஒடுக்கப்பட்ட மக்கள் நிஜாம் படைகளாலும் இந்திய இராணுவத்தாலும் பட்ட வதைகளை ஒத்ததாக
இருக்கிறது. நம் காலத்தில் பரமக்குடியும் பன்னியானும் கண் முன் நிகழ்ந்த
காட்சிகள்.
இந்த மூன்றாவது அத்தியாத்தைக் புரட்டும் எவரும்
இருள் கலந்த பதற்றம் வியாபிக்காமல் கடந்துவிட முடியாது. கல்லறைச் சண்டையின் துவக்க
காலங்களில் “இதெல்லாம் கேக்க கேக்க, எனக்கு இந்தக் கல்லறச் சண்டையைப் பாக்கனும்னு
ஆசையா இருந்துச்சு” (ப,42) என்று எழுதும் பாமா காவல்துறை அராஜகம்
உச்சத்திலிருக்கும் போது “ஒவ்வொரு பூட்சு காலையும் என்னோட நெஞ்சு மேல வச்சு
மிதிக்கிறமாறி இருக்கும்”(ப.46). என்று பதிவு
செய்கிறார். அரசும் சாதி அமைப்பும் இனைந்து நிகழ்த்தும் சாதியக் கொடுங்கோன்மைக்கு
இந்த வரிகள் ஓர் உயிர்ப்புள்ள இலக்கிய சாட்சி.
அடுத்ததாக
நாவலில் இடம்பெறும் உளவியல் ரீதியிலான தாக்குதல்களைப் பட்டியளிடுவோமாயின் அதற்கு
வகை தொகை இல்லை. தீண்டாமைதான் கொடிய மனநோய் என்பார் அம்பேத்கர். அத்துடன்
இந்தியாவின் பெரும்பான்மையோரை மனநோயாளிகளாக வருணிப்பார். பாமா தன் வாழ்நாள் நெடுக
இத்தகைய மனநோயாளிகளின் கூடாரங்களில் சிக்குவதும் தப்புவதுமாக ஒரு சுழல் ஏணிப்
பயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார். மூன்றாம் வகுப்பு படிக்கும்போது “வீட்ல
எங்கண்ணன் இருந்தாக வடப் பொட்டலத்த கையில புடிக்காம, கட்டியிருந்த சரடப் புடிச்சு தூக்கிட்டு வந்த
விஷயத்தை வேடிக்கையாக விவரமாக அண்ணங்கிட்ட சொன்னேன். அவ்வளவு பெரிய ஆளு அப்பிடி
தூக்கிட்டு வெளாண்டு வர்ரார்னு சொல்லிட்டுச் சிரிச்சேன்.ஆனா அண்ணனுக்கு சிரிப்பே
வல்ல. அண்ணன் சொன்னாக; அவரு வெளாட்டுக்கு பொட்டணத்த அப்பிடி தூக்கிட்டு போகலையாம்.
நாயக்கமாரு ஒசந்த சாதிங்கிறதுனால, பறப்பெயலுக பொட்டலத்த தொடக்கூடாதாம். தொட்டா
தீட்டாம்”(ப.27) என அண்ணன் வழி ஒரு
நாயக்கர் மன நோயாளியின் தீண்டாமைச் செயல்பாட்டை அறியவரும் பாமா பிறகு பள்ளி,
கல்லூரி, பணியிடங்கள், கிறித்தவ மடங்கள் எனப் பல இடங்களிலும் மேற்குறித்தவாறான
அனுபவங்களைப் பெறுகிறார்.
“பெரிய
பெரிய பணக்கார வீட்டுப் புள்ளைகபடிக்கிற அந்த பள்ளிக்கொடத்துல, பள்ளிக்கொடத்தைக்
கூட்டிக் கழுவிச் சுத்தம்பண்ண, கக்கூஸ்கழுவ இந்த மாதரி வேலைகளையெல்லாம் எங்க சாதி
ஆளுகதான் பாத்துக்கிட்டு இருந்தாக. மடத்துக்குள்ளையும்அப்பப்ப கீச்சாதி
சனங்களப்பத்தி கேவலமா பெசிக்கிட்டாக. கீச்சாதி சனங்கள மனுஷங்களா நெனச்சுகூடப்
பெசமாட்டாக”(ப.36). இப்படி அடுக்கிக்கொண்டே
செல்லலாம்.
தீண்டாமை
மாறுவேடம் தரித்து உலாவும் இக்காலத்தில் ‘கருக்கு’ ஒவ்வொருவரையும் தத்தமது
மனநிலையைப் பரிசோதித்துக்கொள்ள அழைக்கிறது ‘உங்களில் யார் சாதிய வன்மங்களற்றவர்’
என்கிற சோதனைச் சாலைக்கு.
பொதுவாக
இந்து மதம் என்கிற கருத்தியலின் கீழ் வைத்தே சாதிய விவகாரங்கங்கள் குறித்து
விவாதிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு மாற்றாக கிருத்துவ சமயத்தில் நிலவும் சாதிய
விவகாரங்களை வெளிப்படுத்துவது கருக்கின் தனிச்சிறப்பான அம்சங்களுள் ஒன்று. அயோத்திதாசர்
குறிப்பிடும் வேஷ பிராமணர் கதையாடலுக்கு நிகராக வேஷ கிருத்தவர் எனும் கதையாடலைக்
கட்டமைப்பதற்கான திறப்பினை கருக்கு தன்னகம் கொண்டுள்ளது. இதற்கு
“எந்துருச்ச
ஒடனே செவம், பூச, மதியச் செவம், சாயங்காலத்துல செவம, ராத்திரி செவம்ன்னு
பொழுதன்னிக்கும் செவந்தான். ஆனா இந்த செவத்துக்கும், வாழுற வாழ்க்கைக்கும்,
செய்யுற வேலைக்கும் சம்பந்தமே இல்ல. ஏதோ கடனேன்னு இப்பிடிச் செவங்க. அடுத்தபக்கம்
இவுகளோட அந்தஸ்த்தும், ஆதிக்கமும் இவுகள கிரிஸ்தவகன்னுகூட காட்டாது.
மூனு
வார்த்தைப்பாடுக எடுக்குறாக. அந்த மூனும் இவுகள சொதந்தரப்படுத்தி மக்களை மையமா
வச்சு வாழ வழிசெய்யுதுன்னு சொல்லிக்குடுக்காக. அனா நெசத்துக்கு, இது மூனையும்
வச்சே நம்பள மொடக்கிப்போட்டு அடிமைகளா ஆக்கிப் போடுறாக.”(ப.109) என்கிற வரிகள் ஓர் உதாரணம். ஒரு
விசாவுக்காகக் காத்திருத்தல் எனும் முற்றுபெறாத தம் சுயரிதையில் அம்பேத்கர்
எழுதுவார் ‘ஒருவன் இந்துவுக்கு தீண்டத்தகாதவன் என்றால் அவன் பார்சிக்கும்
தீண்டத்தகாதவனே. ஒருவன் இந்துவுக்கு தீண்டத்தகாதவன் என்றால் அவன்
முகம்மதியருக்கும் தீண்டத்தகாதவனே’ என்று. அதன் தொடர்சியினை பாமா
எழுதியிருக்கிறார் ஒருவன் தலித் என்றால் கிருத்தவத்திலும் அவன் தலித் தான் என்று.
ஏனெனில் சாதி அமைப்பு இந்து-இந்தியா எனும் கோட்பாட்டிற்குள் உயிர் பிழைத்து
வாழ்வது. அப்படியிருக்க உலகளாவிய தத்துவப் பின்புலத்தைக் கொண்ட கிருத்துவத்தை சாதி
எப்படி பற்றிக்கொண்டது. சாதி ஒரு தொற்று நோய். இந்திய நிலப்பிற்குள் புலங்க வரும்
எந்த உன்னதமும் அதற்கு விதிவிலக்கல்ல. கிருத்தவமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆமென்!
என்கிற தோத்திரம்தான் கருக்கு சொல்லும் சங்கதி! இந்தச் சங்கதி இஸ்லாம், பௌத்தம்,
சமணம் உள்ளிட்ட மதங்களில் நிலவும் சாதியப் பாகுபாடுகள் குறித்த பரிசீலனைகளைக்
கோருவதாகக் கருத இடனுண்டு. கம்யூனிஸமும் கூட இதற்கு விதிவிலக்கல்ல எனலாம்.
வெறுமை,
அவநம்பிக்கை, விரக்தி, தன்னிரைவற்ற மனப்பாங்கு...என மனித இருத்தலைக் குழைக்கின்ற
கூறுகளால் படைபூக்கமுள்ள ஒரு மனம் வாழக்கை நெடுகவும் அல்லாடிக் கொண்டிருப்பதை
கருக்கு மற்றும் மனுசி ஆகிய இரு புனைவுகளையும் இணைத்த வாசிப்பில் உணரமுடிகிறது.
இத்தகைய மனோநிலைக்கு சமூகக் காரணிகள் பல. அவற்றுள் விடுதலைக்கான பாதை என நம்பி ஓர்
இலக்கினைத் தேர்ந்தெடுத்துப் பயணப்படும் தருணத்தில் நேரும் அவமானங்கள்,
ஏமாற்றங்கள்தாம் பிரதானமானவை. அந்த விடுதலை என்பது சாதி உள்ளிட்ட ஆதிக்க
ஒடுக்குமுரைகலன்றி வேறல்ல. பாமா எனும் சுயம் சமூகத்திடம், கிறித்தவ மதத்திடம் இந்த
ஏமாற்றங்களையும் அவமானங்களையும் கண்டு உறைவுகொள்கிறது. புனைவுகளினூடாக தம்
இருத்தலுக்கான வெளியிணைப் பிரஸ்தாபிக்கிறது.
“மடத்துல சேந்து, கன்னியாஸ்திரி ஆறதுக்கு ட்ரெயினிங் குடுக்காக. அப்ப
சொல்லிக் குடுக்கரதப் பாத்தா அம்புட்டு அருமையா இருக்கும். நம்ம ஒவ்வொருத்தரும்
வித்தியாசமானவுக; நமக்குன்னு தனித்தன்மை இருக்குது; நம்பலபோல வேற ஒருத்தரு
ஒலகத்துல இல்லவே இல்லன்னு சொல்லித்தாராக. கடவுள் அம்புட்டு ஸ்பெசலா
ஒவ்வொருத்தரையும் படச்சார்னு வாய் நெறைய பேசும்போது கேக்க நல்லாத்தான் இருக்குது.
ஆனா,
நெச வாழ்க்கன்னு வரும்போது, இந்தமாதிரி எதுவும் இருக்காது. எல்லாரும் ஒரே அச்சுல
ஊத்திச் செஞ்சமாதிரி இருக்கனும்னு எதிர்பாப்பாக. வேறமாதிரி சிந்திக்கவோ பேசிறவோ
கூடாது.(ப.110)”
“மொத்தத்துல
நாம நாமளா இருக்கக் கூடாது. வேறாளா உருமாறி செதஞ்சுபோய் கெடக்கனுமாம். இந்தமாதிரி
பைத்தியக்கரத்தனம் எங்கயாச்சும் இருக்கா?” (ப.11) என சுயம் மறுக்கப்படுதலின்
வாதையினை, கோபத்தினைப் கருக்கில் பதிவு செய்யும் பாமா மனுசி நாவலில் இராசாத்தி
எனும் பாத்திரம் ‘தன வீட்டோடு பேசுவதாக’(ப.99), ‘தன் கால்களுடன் பேசுவதாக’(ப.182), ‘தாவரங்களுடன் உரையாடுவதாக’(ப.184), ‘அம்பேத்கர் இயேசு படங்களுடன்
உரையாடுவதாக’(ப.190), ‘இணைப்பு
துண்டிக்கப்பட்ட தொலைபேசியில் உரையாடுவதாக’(ப.189) பதிவு செய்கிறார். பொதுச் சமூகம்
என்கிற போலிமைகளில் கரைந்துள்ளவர்களுக்கு இச்செயல்பாடுகள் அபத்தமாகத் தோன்றும்.
ஆனால் பாமாவைப் பொருத்தமட்டில் இந்தச் சமூக அமைப்புதான் அபத்தத்தின் முழுத்
திரட்சி. இவ்வாறன தன்மைகள்தாம் பாமாவின் புனைவுகளுக்கு ஓர் இருத்தலியல் பாங்கினை
வழங்குகின்றன.
சாதி
அமைப்பானது காலங்காலமாக தலித்துகளின் இருத்தலைத்தான் இடைமறிப்பு செய்து பிழைத்துக்கொண்டிருக்கிறது.
சாதி அமைப்பினைத் தகர்க்க மெனக்கிடும் தலித் புனைவுகளில் இருத்தலியப் பண்புகள்
மிகுந்திருப்பது தவிர்க்கவியலாதது.
இத்துணை
நெருக்கடிகளிலும் ஆசுவாசப்பட்டுக் கொள்வதற்கென படைப்பாளிக்கு வாழ்கை
விட்டுவைத்திருப்பது பிள்ளைப் பிராயத்து ஊர் நினைவுகளை மட்டுமே. அந்த நினைவு
வனத்திலும் சாதிய நச்சுப் பாம்பின் சீண்டல்கள் இல்லாமல் இல்லை என்பதும் கவனம்
கொள்ளத்தக்கது. கருக்கின் 5வது அத்தியாயம் முழுக்க
இந்நினைவுகள் நிரம்பிக்கிடக்கின்றன. ஆண் பெண் பாகுபாடற்ற அந்த விளையாட்டுப் பருவம்
எல்லோரும் கடந்து வருவதுதான் என்றாலும் தலித் குழைந்தைகள் நாயக்கமாருகளாகவும்,
பண்ணை ஆட்களாகவும், நாடார் முதலாளிகளாகவும் தங்களைப் பாவித்து விளையாடுவதான பதிவினை
என்ன அளவுகோல் கொண்டு மதிப்பிடுவதென்பது புதிர்தான் போலும். மற்றபடி களிமண் பொம்மை
செய்து விளையாடுதல், கலியாணம் முடித்து விளையாடுதல்,கபடி ஆடுதல், சோளத்தட்டையில்
சப்பரம் செய்து விளையாடுதல் முதலிய விளையாட்டுக்கள் குழந்தை விளையாட்டுக்கள்
குறித்த ஓர் இனவரவியலாக விளங்குகிறது.
கருக்கின்
வழி பல வினோத மனிதர்களையும் அறிந்துகொள்ள முடிகிறது. முனியாண்டி கோவில் மணியினைத்
திருடிச்செல்வதுடன் விதவமாகத் திருடும் பொந்தன், குழலூதும் ஊதன்,நன்றாகப் பாடி
ஆடும் பன்னிப்பவுலும் அவரது மகனும், வில்லுப்பாட்டுப் படிக்கும் தவசி பேத்தியா
மகன் பவுலு என விவரித்துக்கொண்டே செல்லலாம்.
கருக்கில்
சித்தரிகப்பெற்றுள்ள ஊர் ஓர் கலை நிலமாகவே காட்சி தருகிறது. இதனை “நெறையப்
பேருக்கு படிப்பு வாசனையே இல்லன்னாக்கூட கூத்தும், தாளமும், பாட்டும்ரொம்ப நல்லா
போடுவாங்க” (ப.67) எனப் பதிவு செய்கிறார்
பாமா.
சாதிய
ஒடுக்கு முறைகளுக்கு எதிராக ‘”சாதிய வச்சு சல்லித்தனஞ் செய்யுற எல்லாத்தையும்
நொறுக்கிப்போட்டு, மனுசனுக்கு மனுசன் என்ன ஒசந்தவ தாழ்ந்தவன்னு செஞ்சு காட்டனும்.
நம்பள அமுக்கி சொகங் கண்டவன் சாமானியத்துல நம்பள உடமாட்டான். நாமதா அவனுகள
வைக்கவேண்டிய எடத்துல வச்சு எல்லாஞ் சமந்தான்னு சமுதாயத்தை மாத்திக்
காட்டனும்.”(ப.38) என தலித் ஓர்மைகொண்ட விடுதலைக் கருத்துக்களும்
கருக்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தலித் விடுதலைக்கும் முன்னேற்றத்திற்கும் கல்வி
பிராதானக் காரணியாக ஆங்காங்கே பதிவுசெய்யப்படுகிறது.
சமூகத்தில்
நிலவும் ஒடுக்குமுறையின் ஒட்டு மொத்த பாரங்களையும் சுமப்பவள் தலித் பெண்தான்.
தலித் ஆணைக் காட்டிலும் தலித் பெண் ஒடுக்கப்படுகிறாள் என தலித் பெண்ணியலாளர்கள்
கருத்துரைப்பர். இக்கருத்திற்கு உரம் சேர்க்கும்
வித்தியாசமான பதிவொன்று கருக்கில் இடம்பெறுகிறது. “மத்த சாதிப்பிள்ளைக
கம்மாக்கர வழியா சோடிச்சுட்டு சினிமா பாக்கப்போவாக. ஆனா எங்க தெருவுல
பொம்பளைகயாரும் சினிமாக்குப் போகக்கூடாதுன்னு ஊர்சட்டம். ஏன்னா பலசாதிக்காரப்
பெயலுக சினிமாக் கொட்டையில எங்க சாதி பொம்பள புள்ளைகள புடிச்சி இழுப்பானுகளாம்.
பெறகு மல்லுக்கெட்டு வந்துரும். அதுனால ஆம்பளைக மட்டுந்தான் போவாக.அதுலகூட
எளவட்டங்கதான் போவாக.”(ப.63) எனும் இப்பதிவு தலித்
பெண் ஒடுக்குமுறை குறித்த நுட்பமான சித்தரிப்பு ஆகும்.
கருக்கு
ஓர் ஒற்றை தன்மையுடைய பிரதி அல்ல. ஒற்றை வரையறைக்குள் அதனை அடைக்கவும் இயலாது.
பன்முகத்தன்மையினைத் தன் அகங்க்கொண்டுள்ள கருக்கு தலித் வாழ்வின்
பன்முகத்தன்மையினை தத்ரூபமாகப் பிரதிபளிக்கும் பிரதி. அப்பிரதிக்கு அகவை ஆண்டுகள் 25. வரவேற்போம்! கொண்டாடுவோம்!
.
கருக்கினால் அருபட்டவனின் ஓர்
ஒப்புதல் வாக்குமூலம்
அவன் அரிவாளை புற இடுப்பில்
செருகிக்கொண்டு பனைமரத்தில் ஏறினான். பனையின் கூந்தலை நெருங்க நெருங்க பசிய
ஒலைத்தண்டுகளின் இரு மருங்கிலும் கருக்குகள் புன்னைகைத்துக் கொண்டிருந்தன. புற
இடுப்பில் செருகியிருந்த அரிவாளை எடுத்து ஆனமட்டும் கருக்குகளைச் சிதைத்து
ஒலைத்தண்டுகளை நிர்வாணமாக்கினான். இப்போது பனை உச்சிக்குச் சென்று வாகாக அமர வழி
வாய்த்தது. நொங்குக் குழைகளை சீவிச் சாய்த்தான். எல்லாம் முடிந்ததென்று எண்ணியவன்
அரிவாளை நிலத்தில் வீசினான். இளைப்பாறினான். பனையிலிருந்து தரையிறங்கும் நேரம்
கருக்கென்று ஒரு சத்தம். பனை ஓலைகளில் இருந்து வழியும் மழைத் திவளைகள் போல
செந்திரவம் நிலத்தில் வழிய அப்பொழுதுதான் கண்ணுற்றான் கண்ணில் படாமால் கடுஞ்
சீற்றத்துடன் கறுத்த சர்ப்பம் போல் காத்துக்கிடந்த கருக்கு தன் பாதம் பிளந்ததை....
(கிருஷ்ணன் கோவில் சிறுமலையில் 27.12.2017 அன்று பணி. திரிங்கால் ஆய்வு மையம்
ஏற்பாடு செய்திருந்த பாமாவின் கருக்கு நாவல் வெள்ளிவிழா கொண்டாட்டத்தில்
வசிக்கப்பெற்ற கட்டுரை. வாய்ப்பினை வழங்கிய அண்ணன் ஜெகநாதனுக்கு நன்றி!)